×

கண்மாய் குடிமராமத்து பணிகளை எம்எல்ஏ ஆய்வு செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

சாத்தூர், செப். 20: தமிழக அரசு அனைத்து கண்மாய்களையும் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி நீர் வரும் பாதைகளை சீரமைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதற்கான அரசு அதிகாரிகள் கண்மாய்களில் குடிமராமத்து பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் சரிவர செய்யவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கண்மாய்சூரங்குடியை சேர்ந்த விவசாயி பாலு கூறுகையில், ‘கண்மாய் சூரங்குடி என்ற எங்கள் கிராமத்தில் கண்மாயை காணோம். பல வருடங்களாக கண்மாய் தூர்வாரமல், நீர்வரத்து பாதைகளை சீர்செய்யாமல் அப்படியே அதிகாரிகள் வைத்துள்ளனர். இதனால் கண்மாய் சிறிது, சிறிதாக சம பரப்பு நிலமாக மாறி வருகிறது. இதற்கு முன்பு தான் பஞ்சாயத்து நிர்வாகம் நிதியில்லை என்று கூறி தட்டிக்கழித்து வந்தது. ஆனால் இப்போதே அரசே அதற்கான ஆணையை பிறப்பித்து பணமும் கொடுக்கிறது.

இப்போதாவது கண்மாயை தூர்வாரி நீர்வரத்து பாதையை சீர்செய்ய கூடாதா? இதை கேட்பதற்கு இதற்கு முன் எம்எல்ஏ இல்லை இப்போது இருக்கும் எம்எல்ஏ கண்மாய் குடிமரத்து பணிகள் நடைபெறுகிறதாத என்பதை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார். மற்றோரு விவசாயி பெருமாள்சாமி கூறுகையில், ‘கண்டிப்பான முறையில் எம்எல்ஏ அனைத்து கண்மாய்களையும் ஆய்வு செய்யவேண்டும். பல கண்மாய்களில் பெயரளவில் பணிகளை செய்துவிட்டு. அதை படம் எடுத்துவிட்டு, அதற்கான நிதியை பெற்று பங்கு வைத்துக்கொள்கின்றனர். சாத்தூரில் உள்ள மயிர்ஊரணியை தூர்வருகிறேன் என்று தொடங்கினர். அவர்கள் தொடங்கியவுடன் மழை பெய்தது. ஊரணி பாதி நிறைந்தது. பின்னர் அந்த நீரை வெளியேற்றி மராமத்து பணி செய்வதாக கூறினார். நீரையும் வெளியேற்றினார்கள். நீர்வரத்து பாதையை அடைத்தார்கள். அதனுடன் அவ்வளவுதான் அந்த பணி பாதியிலேயே நிற்கிறது. இப்போது கடந்த சில நாட்களாக சாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தினமும் சுமார் 5 சென்டிமீட்டர் மழையாவது பெய்கிறது. இந்த நீர் பெருகினாலே அந்த ஊரணி நிறைந்து இருக்கும். அதையும் அதிகாரிகள் தடுத்துவிட்டனர். எனவே எம்எல்ஏ அனைத்து கண்மாய்களையும் ஆய்வு செய்யவேண்டும். முதலில் ஊரணி நீர்வரத்து பாதையை சீர்செய்ய உத்தரவிடவேண்டும்’ என்றார்.

Tags : MLA ,
× RELATED விவசாயிகளை அடியோடு அழிக்க அரசுகள்...