×

திருச்செங்கோட்டில் 40 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் தவிக்கும் மக்கள்

திருச்செங்கோடு, செப்.20: திருச்செங்கோட்டில் 40 ஆண்டுகளாக வசிக்கும் வீடுகளுக்கு பட்டா கிடைக்காமல் 3 ஆயிரம் குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். திருச்செங்கோடு நகராட்சி 28வது வார்டு பெரியார் நகர்  32, 33வது வார்டுகளுக்கு உட்பட்ட அண்ணா பூங்கா பகுதி, சாலப்பாளையம், நாகர்பள்ளம், வாணப்பட்டறை, பச்சியம்மன் கோவில்மேடு, சின்னபாலூத்து சந்து, காமாட்சியம்மன் கோவில் சந்து, அழகுமுத்து மாரியம்மன் கோயில் தெரு, நாடார் தெரு  ஆகிய   பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு வீட்டு வரி, காவிரி குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், வாக்காளர்  அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளன. நகராட்சிக்கு சுமார் 2500 குடும்பங்கள் வரி கட்டி வருகின்றன.
    ஆனால், மலைப்புறம்போக்கு, பாறை புறம்போக்கு என்பதால், இங்குள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க முடியவில்லை.  இந்த தொகுதியில் வெற்றி பெற்ற  அமைச்சர்  பொன்னையன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, திமுக அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரது காலத்தில், இந்த வீடுகளுக்கு பட்டா வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அறநிலையத்துறை, வருவாய்த்துறை,  நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் ஒப்புதல் இருந்தால்  மட்டுமே, பட்டா வழங்குவது சாத்தியம் என்பதால், இந்த பிரச்னை இழுத்துக் கொண்டே உள்ளது.
இந்நிலையில், திருச்செங்கோட்டில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடந்தது.  இதில் கலந்து கொண்ட திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதியிடம், தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் மனுக்களை அளித்துள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தார். முகாமில் திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேல், வருவாய் ஆய்வாளர் பாஷா, கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்