×

தர்மபுரியில் பாழடைந்த அரசு அலுவலர் குடியிருப்பு 60 ஆண்டு பழமையான வீடுகள் இடித்து அகற்றம்

தர்மபுரி, செப்.20: தர்மபுரி உழவர் சந்தை அருகே, பாழடைந்த அரசு அலுவலர்களின் குடியிருப்புகள் நேற்று பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
தர்மபுரி நான்கு ரோடு உழவர்சந்தை அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் காலனி உள்ளது. கடந்த1959ம் ஆண்டு 83 சென்ட் நிலப்பரப்பில் 7 வீடுகள் கட்டப்பட்டது. மாவட்டம் பணியற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த குடியிருப்புகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து காணப்பட்டது. இதையடுத்து இந்த வீடுகளில் தங்கியிருந்த அதிகாரிகள் வெளியேறினர்.
இதையடுத்து காலியாக இருந்த வீடுகளை சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்தும், பழ குடோனாகவும் பயன்படுத்தி வந்தனர். மேலும், மாலை நேரங்களில் மது குடிக்கும் பாராகவும், இரவு நேரத்தில் குற்றச்செயல்கள் நடக்கும் இடமாக மாறியது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.  இதையடுத்து மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின் பேரில் நேற்று தர்மபுரி தாசில்தார் சுகுமாரன்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதையன், ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறை, மின் ஊழியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் குடியிருப்பு பகுதிக்கு வந்தனர்.
அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றியவர்கள், மூன்று பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து பாழடைந்த குடியிருப்புகளை இடித்து தரைமட்டம் ஆக்கினர். பின்னர் கற்கள் நட்டு, கம்பிவலை அமைக்கப்பட்டது. 60 ஆண்டு பழமையான வீடுகளை இடித்து அகற்றிய போது, இந்த வீடுகளில் பயன்படுத்திய பர்மா தேக்கு மரச்சட்டங்கள், கதவுகள், ஜன்னல் ஆகியவற்றை அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் காலனியில் உள்ள வீடுகளில்  கடந்த 20 ஆண்டுகளாக யாரும் தங்குவதில்லை. சிலர் ஆக்கிரமித்தாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வீடுகளை இடித்து  சமம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
பாழடைந்த வீடுகளை இடித்து அகற்றிய போது உள்ளே இரந்து விஷ பாம்புகள் நான்கு புறமும் ஓடின. கட்டிடங்கள் இடிப்பதை வேடிக்கை பார்க்க  வந்த பொதுமக்கள், இந்த பாம்புகளை பார்த்து நாலாப்புறமும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Demolition ,houses ,Dharmapuri ,Government Official Quarters ,
× RELATED சீர்காழி அருகே சவுடுமண் குவாரியை...