×

கோவை அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் லஞ்ச புகார்

கோவை, செப்.20:கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் ஊழியர்கள் அதிகளவில் லஞ்சம் பெற்றுவருவதாகவும் உள்நோயாளிகளிடம் ரூ.300 முதல் ரூ.500 வரை வசூல் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தினமும் 7,500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் கேன்சர் உள்பட அனைத்து நோய்களுக்கும் தனியார் மருத்துவமனைக்கு இணையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு வரும் நோயாளிகளில் 95 சதவீதம் பேர் ஏழைகள். அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் இலவச சிகிச்சையை நம்பி மருத்துவமனைக்கு வருகின்றனர்.  மருத்துவமனையில் உள்ள வார்டுகளில் உள்நோயாளிகளாக சிலர் மாத கணக்கில் சிகிச்சை பெறுகின்றனர்.

உள்நோயளிகள் வார்டுகளில், தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றால், கட்டாயம் கையில் குறைந்தது ரூ.2 ஆயிரம் வைத்து இருக்க வேண்டும். பத்து நாட்கள் வார்டில் அட்மிட் செய்தால், ரூ.5 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இங்கு பணம் இல்லை என்றால், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு உயிருடன் திரும்ப முடியாத அளவிற்கு உள்நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
 மருத்துவமனையின், ஐசியு வார்டு, நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவு, இதய நோயாளிகள் வார்டு, குழந்தைகள் வார்டு, கேன்சர் வார்டு என அனைத்து வார்டுகளிலும் இந்த பிரச்னை இருக்கிறது. உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் ஆண்களுக்கு யூரின் டியூப் மாட்டி விடுவதற்கு, தினமும் ரூ.200 முதல் ரூ.300 அளிக்க வேண்டும். உடலை சுத்தம் செய்ய, அறுவை சிகிச்சை அறையில் இருந்து நோயாளிகளை வார்டிற்கு கொண்டு செல்ல ஊழியர்களுக்கு ரூ.200 கொடுக்க வேண்டும். இந்த பணம் கொடுக்கவில்லை என்றால், நோயாளியின் நிலை படுமோசாமகிவிடும். இதற்கு பயந்து நோயாளியின் உறவினர்கள் ஊழியர்கள் கேட்டும் பணத்தை கொடுக்கின்றனர்.

அரசு மருத்துவமனையில் லஞ்சம் குறித்து புகார் அளிக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் வெளிப்படையாக தெரிவித்தாலும், நோயாளிகளின் உறவினர்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை. மருத்துவமனை நிர்வாகமும் லஞ்சம் வாங்கும் ஊழியர்களின் மீது கடுமையான நடவடிக்கையை எடுப்பதில்லை. இதனால், புகார் அளித்தும் பயனில்லை என நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், “ஊழியர்கள் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம். இது தொடர்பாக நேரடியாக புகார் அளிக்கலாம். பொதுமக்களின் வசதிக்காக புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. நாங்களும் தொடர்ந்து லஞ்சம் புகார் வருகிறதா என வார்டுகளில் ஆய்வு செய்து வருகிறோம். சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் நேரடியாக கேட்கிறோம். சம்மந்தப்பட்ட நபர்களின் மீது புகார் அளித்தால் மட்டுமே எங்களால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, லஞ்சம் வாங்குவது தெரியவந்தால், புகார் அளிக்க வேண்டும்” என்றார்.

Tags : Coimbatore Government Hospital ,
× RELATED ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில்...