×

தேன்கனிக்கோட்டை அருகே கம்பி வலை விரித்து முயல் வேட்டை

தேன்கனிக்கோட்டை, செப்.20: தேன்கனிக்கோட்டை அருகே கம்பி வலை விரித்து முயல் வேட்டையாடிய இருவருக்கு தலா ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையை தடுக்கும் வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி, வனச்சரக அலுவலர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வனக்காப்பாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் நொகனூர் காப்பு காட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போனபள்ளம் என்னுமிடத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணமாக பேசியுள்ளனர். தீவிர விசாரணையில் அவர்கள், அந்தேவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் மகன் முரளி(27), கிருஷ்ணன் மகன் சின்னபையன்(எ) சின்னசாமி(33) என்பதும், அப்பகுதியில் முயல் வேட்டைக்கு வந்திருப்பதும் தெரிய வந்தது. உடனே, அங்கு நடத்திய சோதனையில் கம்பி வலையில் சிக்கிய முயல்களை பதுக்கி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அந்த முயல்களை மீட்ட வனத்துறையினர் இருவரையும் கைது செய்தனர். மேலும், கம்பி வலைகளையும் கைப்பற்றினர். மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி உத்தரவின்படி, வன உயிரின தடுப்பு சட்டத்தின் கீழ் இருவருக்கும் தலா ₹25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

பர்கூரில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி, செப்.20:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளங்களை தூர்வாரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி ஊராட்சியில் 11 ஏக்கர் பரப்பளவு கொண்ட கன்னிசெட்டி ஏரியை ₹5 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், சிகரலப்பள்ளி ஊராட்சியில் கப்பல்வாடி கீழ் ஏரியில் ₹5 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணிகளை கலெக்டர் பிரபாகர் மற்றும் பர்கூர் எம்எல்ஏ., ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஒன்றியத்தில் கன்னிசெட்டி ஏரி, கோவிந்தநாயக்கன் ஏரி, அழகியபுதூர் ஏரி, கப்பல்வாடி ஏரி, ராயல் ஏரி, பில்லனகுப்பம் ஏரி, லட்சுமிநாயக்கன் ஏரி, சந்தூர் ஏரி, வெப்பாலம்பட்டி ஏரி, குரும்பன்குட்டை ஏரி, லட்சுமி கவுண்டன் ஏரி, ஆதிதிராவிடர் ஏரி ஆகிய 12 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தலா ₹5 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அத்துடன் 43 குளம், குட்டைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் 4 சிறு பாசன ஏரிகளும், 12 குளம், குட்டைகள் தூர் வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு கலெக்டர் கூறினார்.  இந்த ஆய்வின் போது டிஎஸ்பி நல்லசிவம்(பயிற்சி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், பயாஸ் அகமது, ஒன்றிய பொறியாளர் கோவிந்தராஜ், ஜெகதீஷ்குமார், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தூயமணி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, பிஆர்ஓ சேகர் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.


Tags : rabbit hunting ,Thenkanikottai ,
× RELATED முயல் வேட்டை வழக்கில் மேலும் 2 பேர் கைது