×

கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு வைக்கோல் கட்டு ₹310க்கு விற்பனை

கடத்தூர், செப்.20:  கடத்தூர் பகுதியில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வெளிமாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்படும் வைக்கோல் கட்டு ஒன்றை ₹310க்கு விவசாயிகள் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், பாலக்கோடு, கடத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட  கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தர்மபுரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டதால், நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்து கிணறுகளின் தண்ணீர் வற்றியது.வறட்சியால் பயிர்கள் மட்டுமின்றி தென்னை, பனை மரங்களும் காய்ந்த கருகிப்போனது. இதனால் கால்நடைகளுக்கு தீவனம், புல் போன்றவற்றின் தட்டுப்பாடு ஏற்பட்டது.

 இதனையடுத்து, திருவண்ணாமலை, விழுப்புரம், வந்தவாசி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வைக்கோலை வாங்கி வந்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். தவிர, வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் தர்மபுரிக்கு லாரிகள் மூலம் வியாபாரிகள் சிலர் வைக்கோலை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர். கடத்தூர் சுற்றுவட்டார பகுதிக்கு லாரிகளில் வைக்கோலை எடுத்து வந்து, மொத்தமாக வாங்கும்போது கட்டு ₹180 முதல் ₹250 வரை விற்பனை செய்கின்றனர். சில்லறை விற்பனையில் வைக்கோல் கட்டு ₹310க்கு விற்பனை செய்கின்றனர். கூடுதல் விலைக்கு வைக்கோல் வாங்கி கால்நடைகளை வளர்ப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்கள் மூலம், மானிய விலையில் கால்நடைகளுக்கு தேவையான அளவு தீவனத்தை வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :
× RELATED மதுரை மாவட்டத்தில் மேலும் 310 பேருக்கு கொரோனா உறுதி