×

மாவட்டத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் இயக்குனர் கவுதமன் சந்திப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.20: தர்மபுரி மாவட்டத்தில் 8வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை, இயக்குனர் கவுதமன் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.தர்மபுரி  மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி மற்றும் பாப்பம்பாடி  ஆகிய கிராமங்களில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை, தமிழ்  பேரரசு கட்சி பொதுச்செயலாளர் இயக்குனர் கவுதமன் நேற்று நேரில் சந்தித்து  ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் கூறியதாவது: இந்த கொடூர மரண சாலைக்கு,  சுமார் 10 ஆயிரம் கோடி செலவு செய்கிறார்கள் தற்போது நாட்டில் குடிநீர்  பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மழை இல்லை. ஒகேனக்கலில் வரும் தண்ணீர் வீணாக  கடலில் கலக்கிறது. இந்த தொகையில் ஆறு, குளங்களை தூர்வாரி, வீணாகும் நீரை  சேமித்து வைத்தால் விவசாயம் செழிக்கும். உலகமே நம்மை திரும்பிப்  பார்க்கும். அதை விட்டுவிட்டு. சுமார் 7,000 ஏக்கர் நிலம் வீணாவது மடடும்  இல்லாமல் 2,000 வீடுகள், ஆயிரம் கிணறுகள் அழிக்கின்றனர்.இதனால் மன  உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள், தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்ய  முடியாமலும், படிக்க வைக்க முடியாமலும், அவதிப்பட்டு வருகிறார்கள். சேலம்  -சென்னை இடையே  ஏற்கனவே திருப்பத்தூர், விழுப்புரம், தர்மபுரி வழியாக  மூன்று சாலைகள் உள்ளது. இதனை பழுது நீக்கியும் அரூர் திருப்பத்தூசாலையை  நான்கு வழிச்சாலையாக மாற்றி செப்பனிட்டு பராமரிப்பு செய்தாலே போதுமான  போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய முடியும்.

அதனை விடுத்து விவசாயிகளின்  வயிற்றில் அடிக்கும் வண்ணம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாசம்  செய்து, இந்த சாலை போடுவது தேவையில்லாதது. இது ஏழை மக்களுக்காக போடும் சாலை  அல்ல. பணக்காரர்களுக்காக செயல்படும் மத்திய, மாநில அரசுகளின் வேலையாகும்.  எந்த விவசாய நிலத்தில் இருந்தும் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம்.  அப்படி எங்கள் உயிரே போனாலும் அந்த மண் மீது கை வைக்க விடமாட்டோம்.   நான்  உங்களுடன் இருந்து கை கொடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்  கட்சியின் மண்டல செயலாளர் கரிகாலன், சந்திரகுமார், வேலன், வேலு, ஆசிரியர்   அருள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை கவுதமன் வந்தார். அவர் கலெக்டர் மலர்விழியை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்றார். அதற்கு அங்கிருந்து அலுவலர்கள், கலெக்டர் வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார் என்றனர். கலெக்டரை சந்திக்காமல் செல்ல மாட்டேன் என கூறிய கவுதமன், தரையில் அமர்ந்து தர்ணா ஈடுபட்டார். தகவலறிந்து அங்கு வந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதாராணி, செல்போன் மூலம் கலெக்டருடன் கவுதமனை பேச வைத்தார். அதன் பின்னர் மாலை 6.45 மணிக்கு, கவுதமன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் கூறுகையில், ‘தர்மபுரி கலெக்டர் மலர்விழியை, செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, 8 வழிச்சாலை தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதாக கூறி, செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்,’ என்றார்.

Tags : Gowdaman ,district ,road ,
× RELATED சீசன் தொடங்கிய நிலையில் மாங்காய்களில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை