×

க.பரமத்தி குப்பம் அருகில் செட்டிக்காட்டில் தேங்காய் நார் உற்பத்தி ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டு கால்நடைகளுக்கு பாதிப்பை தடுக்க நடவடிக்கை வேண்டும் தவறும்பட்சத்தில் போராட்டம்: கிராம மக்கள் எச்சரிக்கை

க.பரமத்தி, செப். 20: க.பரமத்தி அருகே குப்பம் அடுத்த செட்டிக்காட்டில் தேங்காய் மட்டை நார் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தால் நிலத்தடி நீர் மாசு பட்டு கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க முன் வர வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சி சுற்று பகுதியில் விவசாயம் மட்டுமல்லாமல் ஏராளமான விவசாயிகள் ஆடு, மாடு, எருமை, கோழி என மொத்தம் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகளை வளர்த்து ஜீவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக திடீரென புதிது புதிதாக நோய்கள் வந்து கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதியினர் குறை கூறி வந்தனர்.
இந்நிலையில் குப்பம் ஊராட்சி செட்டிக்காடு பகுதியில் உள்ள தேங்காய் மட்டை நார் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தில் இருந்து தேங்காய் நார் தூசிகள் வெளியேறி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் தேங்காய் நார் தயாரித்தது போக மீதம் ஆகும் கழிவுகளை ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி சேமித்து வைத்து தண்ணீர் பாய்ச்சி அவற்றை செடிகளுக்கு உரமாக தயார் செய்யும் பணியும் மேற்கொள்கின்றனர்.இதனால் அருகே உள்ள கிணறுகளில் தண்ணீர் நிறம் மாறி மாசடைந்து கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தும் பலனில்லை என அப்பகுதியை சோந்தவர்கள் பலரும் கூறுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியது:முத்தம்மாள்: நார் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதன் சுற்று பகுதி நிலங்களில் நார்கள் கிடக்கின்றன. ஆலையில் மிஷின் ஓடியபோது நார் பறந்து வந்து அருகில் உள்ள தார்சாலையில் சென்ற எனது கண்ணில் பட்டு குத்தியது. இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன் இதனால் நான் கண்ணாடி அணிய வேண்டிய சூழல் வந்து விட்டது.கொங்குவேல்: நார் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தில் நார் உற்பத்தி செய்தது போக மீதி கழிவுகளை வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நிலத்தில் கொட்டி குவித்து வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் பலனில்லை. நொய்யல் ஆற்று பாசன வாய்க்காலை மூடி ஆக்கிரமித்து உள்ளனர்.பழனியம்மாள்: கால்நடைகள் வளர்த்து ஜீவனம் நடத்தி வருகிறோம். கால்நடைகளுக்காக கிணற்று பாசனம் மூலம் சோள பயிர் சாகுபடி செய்தால் பயிர் வளர்வதில்லை. இந்த கிணற்று நீரை கால்நடைகள் பருக மறுக்கின்றன. அப்படியே பருகினாலும் வாய் நுரையோடு மயங்கி விடுகின்றன.

அர்ச்சுனன்: ஆலையில் தேங்காய் மட்டை நார் உற்பத்தி செய்தது போக மீதம் உள்ள கழிவுகளை வேறொரு நிலத்தில் மொத்தமாக கொட்டி சேமித்து வைத்துள்ளனர். இந்த கழிவில் தினசரி தண்ணீர் பாய்ச்சி அவற்றை செடிகளுக்கு உரமாக தயார் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் அந்த நீர் நிலத்தடியில் சென்று இதன் சுற்று பகுதியில் உள்ள கிணறுகளில் நீரின் நிறம் மாறியுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.எனவே மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் நார் உற்பத்தி செய்யும் நிறுவனம் அருகேயுள்ள விவசாய கிணற்று நீரை உடனே ஆய்வு செய்வதுடன் கழிவுகளை ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி சேமித்து அதில் தண்ணீர் விடுவதால் கிணறுகளில் தண்ணீர் நிறம் மாறி மாசடைந்து கால்நடைகள் பாதிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்துவது எனவும் கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.



Tags : Chettikadikkam ,Paramathi Kuppam ,
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது