×

தெற்கு வள்ளியூர் 4 வழிச்சாலையில் வடலிவிளை - கள்ளிகுளம் சாலையை இணைக்க புதிய பாலம்

பணகுடி, செப். 20: தெற்கு வள்ளியூர் பகுதியில் 4 வழிச்சாலை பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் வடலிவிளை விலக்கு - கள்ளிகுளம் சாலையை இணைக்க புதிய பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெறுவதாக இன்பதுரை எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
நெல்லை - நாகர்கோவில் இடையே அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையின் இருபுறமும் அமைந்துள்ள கிராமங்களை இணைப்பதற்கும், பொதுமக்கள் கடப்பதற்கும் முறையான திட்டமிடல் இல்லாமல் சாலை அமைக்கப்பட்டதால் பல்வேறு கிராம மக்கள் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
குறிப்பாக தெற்கு வள்ளியூர் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. இதையடுத்து போலீசார் கலந்தபனையில் நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் கடக்கும் பகுதிகளில் தடுப்புகள் வைத்து அடைத்தனர். சிலர் விதிகளை மீறி சென்டர் மீடியனை தாண்டி சாலையை பயன்படுத்தி வரும் நிலை நிலவுகிறது.வடலிவிளை,விசுவாசபுரம்,ரோஸ்மியாபுரம்,கள்ளிகுளம்,அம்மச்சி கோவில், ராதாபுரம், தெற்கு வள்ளியூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் வேறு வழியின்றி பிலாக்கொட்டை பாறை அல்லது பாம்பன்குளம்  பகுதி வழியாக தங்கள் கிராமங்களுக்கு சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.

இதற்கு தீர்வாக வடலிவிளை விலக்கு பகுதியிலிருந்து கள்ளிகுளம் செல்லும் சாலையை இணைக்கும் விதமாக 4 வழிச்சாலையில் புதிய பாலம் அமைக்க வேண்டுமென தொகுதி எம்.எல்.ஏ.  இன்பதுரையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும் விதமாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய மதுரை மண்டல அலுவலர்களை சந்தித்து பேசி புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரினார். இதுகுறித்து இன்பதுரை எம்.எல்.ஏ. கூறுகையில், ‘‘வள்ளியூரில் ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருவதால் பெரும்பாலான வாகனங்கள் தெற்கு வள்ளியூர் பகுதிக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து பாம்பன்குளம் பகுதிக்கு சென்று திரும்பி வருகிறது.

தெற்கு வள்ளியூர் கிராசிங்கில் இருபுறமும் வாகனங்கள் செல்வதால் தொடர் விபத்துகள் நடந்தன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலம் கட்டக் கோரி என்னிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த கடந்த 29ம் தேதி மதுரை மண்டலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அலுவலர்களை சந்தித்து அவர்களை தெற்கு வள்ளியூர் பகுதிக்கு அழைத்து வந்தேன். இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை ஆய்வு செய்த அவர்கள் பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உறுதியளித்தனர். இதுகுறித்து தமிழக முதல்வர் , மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கவனத்திற்கும் கொண்டு சென்றேன். இதையடுத்து வடலிவிளை விலக்கு - கள்ளிகுளம் சாலையை இணைக்கும் வகையில்  புதிய பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். கலந்தபனை பகுதியிலும் பொதுமக்கள் சிரமமின்றி சாலையை கடந்து செல்ல விரைவில் திட்டம் வகுக்கப்படும்’’ என்றார்.

Tags : bridge ,Vadalivilai - Kallikulam Road ,road ,South Valliyoor ,
× RELATED பாலத்தில் பைக் மோதி பூசாரி பலி