×

ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் சின்னமுட்டம் மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை

கன்னியாகுமரி, செப்.20: குமரி  மாவட்டம் சின்னமுட்டம்  மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு  350க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.  அதிகாலை 5 மணிக்கு சென்று  இரவு 9 மணிக்கு கரை திருப்ப வேண்டும் என்பது  விதிமுறையாகும். இந்த விதிமுறையை தளர்த்தவேண்டும் என்று தொடர்ந்து அவர்கள் அரசுக்கு  கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குமரி மாவட்டம் வந்த  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கன்னியாகுமரி அதிமுக பேரூர்  செயலாளர் வின்ஸ்டன் தலைமையில் சின்னமுட்டம் துறைமுகம் விசைப்படகு  உரிமையாளர்கள்  சங்க தலைவர் வானவில் சகாயம் உட்பட நிர்வாகிகள்  சந்தித்து  இரவில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.இரவில்  தங்கி மீன்பிடிக்க  அனுமதி அளித்தால், ஆழ்கடலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை  உருவாகும் என்றும், சின்னமுட்டம் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இரவில்  தங்கி மீன் பிடிக்கும் நடைமுறை இல்லை என்றும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே,  எஸ்.பி. நாத் ஆகியோர் தெரிவித்தனர்.

அப்போது மாநிலத்தில் உள்ள  மற்ற துறைமுக மீனவர்கள் இரவில் தங்கி மீன்பிடிக்கும் போது, இங்குள்ள  மீனவர்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது. காலநிலை உள்ளிட்ட பல  காரணங்களால், கடற்கரையில் மீன் வளம் குறைந்து வருவதால், கன்னியாகுமரி  சின்னமுட்டம் மீனவர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது. அதை  பரிசீலனை செய்து முடிவு எடுக்க தான் அரசாங்கம் மற்றும் அதிகாரிகள்  இருக்கிறோம். எனவே இது குறித்து உடனடியாக கலந்தாலோசித்து முடிவெடுக்க  வேண்டும் என கலெக்டர், எஸ்.பி.,யிடம் அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும்  இந்த விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனே  நடவடிக்கை எடுப்பதாக விசைப்படகு உரிமையாளர்களிடம் அமைச்சர் உறுதியளித்தார்.


Tags : Fisheries Minister ,fishermen ,sea ,
× RELATED மத்திய, தெற்கு வங்கக்கடல்...