×

சாக்கோட்டை திருமெய்ஞானம் தெருவில் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயம்

கும்பகோணம், செப். 20: சாக்கோட்டை திருமெய்ஞானம் தெருவில் உள்ள தொகுப்பு வீடுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டும், சிமென்ட் காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை திருமெய்ஞானம் தெருவில் அப்பகுதி மக்களுக்காக 50க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளை 1999ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் சிமென்ட் காங்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு 10 ஆண்டுகளான நிலையில் வீடுகளில் சீரமைப்பு பணிகளை அரசு சார்பில் செய்யவில்லை. இதனால் கட்டி கொடுக்கப்பட்ட சில ஆண்டுகளில் தொகுப்பு வீடுகளில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்தன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவி–்ல்லை. இந்நிலையில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் திருமெய்ஞானம் தெருவில் உள்ள தொகுப்பு வீடுகளின் மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. மேலும் பக்கவாட்டு சுவர்களிலும் விரிசல் விட்டு எப்போது விழுமோ என்று ஆபத்தான நிலையில் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் தினம்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையில் அங்குள்ள தொகுப்பு வீட்டில் படுத்திருந்த மூதாட்டி ஒருவரின் மேல் சிமென்ட் காரைகள் விழுந்து லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு குடியிருப்பவர்கள், தொகுப்பு வீடுகளில் இரவு நேரங்களில் உறங்காமல் அருகிலுள்ள உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று தூங்கி வருகிறார்கள். இதுபோன்ற அவலநிலையால் மாணவர்கள் நிம்மதியாக படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தொகுப்பு வீடுகளை சுற்றி செடி கொடிகள் மண்டி புதராக காணப்படுகிறது. எனவே சாக்கோட்டை திருமெய்ஞானம் தெருவில் உள்ள தொகுப்பு வீடுகளை சிறப்பு நிதி ஒதுக்கி சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Package houses ,Sakkottai ,Thirumayaganam Street ,
× RELATED பூந்தமல்லி அருகே இடிந்து விழும் ஆபத்தில் தொகுப்பு வீடுகள்