×

விபத்துகளை தடுக்க சாலை குழிகளை மூடுங்கள்

புதுச்சேரி, செப். 20:    மழைக்காலம் துவங்கியுள்ளதால் விபத்துகளை தடுக்கும் வகையில்  சாலை குழிகளை மண்ணைக்கொண்டு மூடுமாறு போலீசாருக்கு கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து  வாட்ஸ் அப்பில் எனது போலீஸ் குடும்பத்தாருக்கு எனக்குறிப்பிட்டு அனுப்பியுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:  சாலையிலுள்ள குழிகளில் கவனம் செலுத்துங்கள், வரும் காலம் மழைக்காலம் என்பதால் பல இடங்களில் குழிகள் உருவாகியிருக்கிறது.  அதை கண்டறிந்து சரி செய்தாலே,  பல விபத்துகளை தடுக்க முடியும். உங்களிடமுள்ள ஊழியர்களை கொண்டு குழிகளை மூடுங்கள். உள்ளூர் அமைப்புகளுடன் இணைத்து பணியாற்றுங்கள். இதை மக்கள் பார்த்தால் உங்களை கண்டிப்பாக பாராட்டுவார்கள். இப்பணியை செய்து அதை புகைப்படம் எடுத்து பகிருங்கள். சாலை குழிகள் விஷயத்தை தவிர்த்து விடாதீர்கள்.

விபத்து நிகழ்ந்து அதற்கான முதல்தகவல் அறிக்கை தொடங்கி, விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கை பெறுவது என காலத்தை பயன்படுத்துவதை இதுபோன்ற பணிகள் குறைத்து விடும். அதேபோல் பேனர் அகற்றும் பணியிலும் உதவுவது அவசியம். புகார்களுக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையையோ, 1031 என்ற எண்ணையோ பயன்படுத்துமாறு மக்களிடம் தெரிவியுங்கள். பேனர் விஷயத்தில் உடன் நடவடிக்கை எடுப்பதால், எனது முழு ஆதரவும் உள்ளாட்சித்துறைக்கும், அதன் இயக்குநருக்கும் உண்டு.

இது பொதுப்பணித்துறைக்கும், போலீசாருக்கும் பொருந்தும். அதேபோல் துறை ஆணையர்களும் சாலை குழிகளில் கவனம் செலுத்தி மூடி அவசரகால நடவடிக்கையை எடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.  இச்சூழலில் நேற்று மாலை ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ்அப்பில் போக்குவரத்து போலீசார் சாலையில் பள்ளங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக புகைப்படத்தை பகிர்ந்தார். அதில், “போக்குவரத்து போலீசார் சாலையிலுள்ள பள்ளங்களை சீரமைக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றனர். நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையினரும் இதுபோல் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் இரவு ரோந்திலும் இணைந்து பணியாற்றவேண்டுமென தெரிவித்துள்ளார்.

Tags : accidents ,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி