×

பிஆர்டிசி ஊழியர்கள் போராட்டத்தால் மக்கள் அவதி

புதுச்சேரி, செப். 20:   புதுச்சேரியில் பிஆர்டிசி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்கிறது. 3 மாத நிலுவை சம்பளம், விடுபட்ட போனஸ் இன்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆர்டிசி) 900 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 125 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக பிஆர்டிசி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனை உடனே வழங்கக்கோரியும், கடந்தாண்டு அறிவித்த ரூ.11 ஆயிரம் போனஸ் தொகையை வழங்க வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மாதந்தோறும் மாதஇறுதியில் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ம் தேதி பிற்பகல் முதல் பிஆர்டிசி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் புதுச்சேரி அரசு பேருந்துகள் அனைத்தும் ஓடாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிஆர்டிசியின் போக்குவரத்து சேவை முற்றிலும் ஸ்தம்பித்த நிலையில் கிராமப்புற மக்கள் அவதிப்பட்டனர். நேற்று முன்தினம், போக்குவரத்து அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து ஆணையர் சிவகுமார், பிஆர்டிசி மேலாண் இயக்குநர் குமார், பொதுமேலாளர் ஏழுமலை மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது 3 மாத நிலுவை சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் ரூ.11 ஆயிரம் தொகை உடனே வழங்குவதாகவும், அடுத்த கேபினட் கூட்டத்தில் முடிவெடுத்து 7வது ஊதியக்குழு சம்பளம் வழங்குவதாகவும், ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக ஒரு மாதத்தில் மாற்றுவதாகவும் உறுதியளித்தார். ஆனால் ஒப்பந்த ஊழியர்கள், தங்களை உடனே நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.

அதை அமைச்சர் ஏற்காத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பிஆர்டிசி ஊழியர்களின் ஸ்டிரைக் நேற்று 3வது நாளாக தொடர்ந்தது. பணிகளை புறக்கணித்து டிரைவர்களும், கண்டக்டர்களும், மற்ற பணியாளர்களும் பணிமனை முன்பு அமர்ந்திருந்தனர். பல்வேறு வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் நகரம், கிராமப்புறங்களுக்கு செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகினர். சம்பளம் வழங்கப்படாததால் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனிடையே, அமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி, அனைத்து ஊழியர்களுக்கும் 3 மாத நிலுவை ஊதியம் மற்றும் விடுபட்ட போனஸ் ரூ.11 ஆயிரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கோப்புகள் தயாராகி கருவூலகத்துக்கு நேற்று மாலை சென்றது.

அங்கிருந்து இன்று (20ம் தேதி) பிஆர்டிசி கணக்கிற்கு பணம் வந்து சேரவுள்ளது. அதன் பிறகு, ஊழியர்களின் கணக்கில் இன்று மதியம் மற்றும் மாலைக்குள் வரவு வைக்கப்படும் என தெரிகிறது. இதனை தொடர்ந்து, ஸ்டிரைக் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்படும். ஒருவேளை இதனை ஒப்பந்த ஊழியர்கள் ஏற்க மறுத்து, நிரந்தர ஊழியர்கள் ஏற்றுக் கொண்டால் பேருந்துகள் மாலை முதல் இயக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பிஆர்டிசி ஊழியர்களின் 4 நாள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும் என தெரிகிறது.

Tags : BRTC ,
× RELATED தினமும் நடுரோட்டில் பழுதாகி நிற்கும்...