×

கடலூர் அரசு கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கடலூர், செப். 20: கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று மூன்றாம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணம் உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் நேற்று மூன்றாம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர். பின்னர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தி உள்ளது ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால் அதை திரும்பப் பெற வேண்டும். 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவித்திருப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கும் வகையில் மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியை கண்டித்தும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் முழக்க போராட்டமும் நடத்தினர்.

மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து கல்லூரி நிர்வாகம் இன்று (20ம் தேதி) விடுமுறை அறிவித்துள்ளது. விருத்தாசலம்: இதேபோல், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசுக் கலை கல்லூரியில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சிதம்பரம்: சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். பின்னர் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Holidays ,Government College ,Cuddalore ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்