×

சமூக மாறுதலுக்கு வித்திட்டவர் அண்ணா துணைவேந்தர் புகழாரம்

காரைக்குடி, செப். 19: தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக மாறுதலுக்கு வித்திட்டவர் அறிஞர் அண்ணா என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன் பேசினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அறிஞர் அண்ணா ஆய்வு இருக்கை சார்பில் அண்ணா பிறந்த நாள் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராசாராம் வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக மாறுதலுக்கு வித்திட்டவர் அறிஞர் அண்ணா. எதையும் ஆழ்ந்து படிப்பவர், கற்றறிந்த மாமேதை. தனது எழுத்துக்களால் சமுதாயத்தை மாற்றிக்காட்டியவர். தனது ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்தார்.
தமிழையும், தமிழ்நாட்டையும் தனது மூச்சாக கொண்டிருந்தவர். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தங்களுக்கென குறிக்கோளை உருவாக்கி கொள்ள வேண்டும் அப்போது தான் அவர்கள் சமுதாயப் பணி செய்ய முடியும் என்பதை உணர்த்தியவர்.
பல்கலைக்கழகங்கள் எப்போதும் சமுதாயத்தோடு ஒன்றியிருக்க வேண்டும். சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அவற்றின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றார். சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் விஜயராகவன், ஆட்சிப் பேரவை உறுப்பினர் சிதம்பரம், பேராசிரியர் அய்க்கண், பேராசிரியர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பல்கலைக்கழக முதுகலை துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் வசந்தகுமார், யோகதர்ஷினி, சுப்ராஜா, ஹைருன், ஹஃபீலா, நவீன் லூர்துராஜ், சுகாசினி, லட்சுமிநாராயணன், ஜோதீஸ்வரி ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் செந்தமிழ் பாவை நன்றி கூறினார்.

Tags : Anna ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்