×

மழையும் கைவிட்டதால் கரிமூட்ட தொழிலுக்கு மாறிய விவசாயிகள் தொழிற்சாலைகள் அமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், செப்.19:  ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மழை இல்லாமல் விவசாயம் பொய்த்து போனது. இதனால் மாற்று தொழிலாக கரிமூட்ட தொழிலில் விவசாய பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதியான ஒருங்கிணைந்த திருவாடானை தாலுகா பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சரியான மழை பெய்யாததால் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான ஆவரேந்தல், பாரனூர், சித்தூர்வாடி, சோழந்தூர், வடவயல், மங்கலம், கலக்குடி செட்டிய மடை, பிச்சனா கோட்டை, ரெகுநாதன் மடை, செங்குடி, பூலாங்குடி, குயவனேந்தல் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் மிளகாய்,எள் போன்ற பயிர்களுக்கு மழை இல்லாததால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வில்லை. ஒரளவு விளைந்த மிளகாய் வத்தலுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை.
மேலும் இப்பகுதி மக்களுக்கான வேலை வாய்ப்பை தரக்கூடிய எந்தவிதமான தொழிற்சாலைகளோ நிறுவனங்களோ இல்லை. இதனால்  பிழைப்புக்கு வேறு வழி இல்லாத விவசாய பொதுமக்கள் கிராமங்களில் ஏராளமாக உள்ள கருவேல மரங்களை பயன்படுத்தி கரிமூட்டம் போடும் தொழிலில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர். கருவேல மரங்கள் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று தான். இதனால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதும் உண்மை தான். இருந்த போதும் இன்றைய நிலையில் கருவேல மரங்களே! இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் சரியான மழை பெய்யாததால் கடந்த 4 வருடமாகவே விவசாயம் இல்லாமல் எங்களது குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றது. ஏற்கனவே கடந்த 3 வருடமாகவே மழை இல்லாமல் போனதினால் பல வகையில் கடனாளியாகி விட்டோம். இந்த வருடமாவது நல்ல மழை பெய்ந்து விடும் கஷ்டம் தீர்ந்துவிடும் என்று நினைத்தோம். கடந்த வருடமும் மழை இல்லாததால் விவசாயம் பொய்த்து போனது. இதனால் மிகவும் துன்பப்படும் நிலை உருவாக விட்டது. எங்கள் ஊர் பகுதிகளில் ஏதேனும்  தொழிற்சாலைகள் இருந்தாலாவது ஏதேனும் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதற்கும் இங்கே வழி இல்லை.
இதனால் இப்பகுதி மக்கள் வேறு வழியில்லாமல் கரிமூட்டத் தொழிலை நம்பி இறங்கிவிட்டோம். கருவேல மரங்களை மிகவும் நிதானமாக வெட்ட வேண்டும். இல்லை என்றால் கை, கால்களை பதம் பார்த்து விடுகின்றது. எப்படி இருந்தாலும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமே என்ற நோக்கில் சொந்தமாகவும், கூலிக்காகவும் கரிமூட்ட தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். எனவே இதற்கு மாற்றாக வேலை வாய்ப்பை அளிக்கும் விதமாக ஏதேனும் தொழிற்சாலைகளை அரசு நிறுவி எங்களை போன்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்’’என்றனர்.

Tags : factories ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...