×

பரமக்குடி ரயில் நிலையத்தில் தாகம் தீர்க்க தண்ணீர் இல்லை அதிகாரிகள் மீது பயணிகள் குற்றச்சாட்டு

பரமக்குடி, செப்.19:  பரமக்குடி ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி ரயில் நிலையத்திற்கு தினமும் பரமக்குடி, இளையான்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி போன்ற சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் வருகின்றனர். பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, திருச்சி மார்க்கமாக சென்னை, திருப்பதி மற்றும் வெளிமாநிலம் செல்லக்கூடிய 15க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கிறது. ஆனால் தினமும் சுமார் 2 ஆயிரம் பேர் வந்து செல்லும் பரமக்குடி ரயில் நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில்  குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் மட்டுமே பயன்பட்டில் இருந்தது. அதன்பிறகு முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதாகியதால் சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் குடிநீர் தொட்டி கட்டியும் பயனில்லாமல் உள்ளது. ரயிலில் வரும் வெளியூர் பயணிகள், இங்குள்ள குடிநீர் குழாய்களை பார்த்ததும் கேன்களில் தண்ணீர் பிடிக்க வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனால் பயணிகள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பயணிகளும், பல்வேறு அமைப்புகளும் ரயில்வே அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை. ரயில் நிலையத்திற்கு வரும் முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஆகையால் ரயில்வே அதிகாரிகள், ரயில் நிலையங்களை அவ்வப்போது ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி  பாம்பூர் ஜான் கூறுகையில், ‘‘பரமக்குடி ரயில் நிலையத்தில் தாகம் தீர்க்க குடிநீர் இல்லாமல் பயனிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ரயில் நிற்கும்போது, தண்ணீர் பிடிக்க சென்ற பார்த்தால் எந்த குடிநீர் தொட்டியிலும் தண்ணீர் வருவில்லை. இதை புகார் செய்ய புகார் புத்தகம் கேட்டால் ரயில் நிலைய அதிகாரி கொடுக்க மறுகின்றனர். ரயில்வே போலீசார் பயனிகளுக்கு பாதுகாப்பும், வசதிகளையும் செய்து கொடுக்காமல் ரயில் நிலையத்தின் அதிகாரிகளுக்கு மட்டுமே வேலை செய்து வருகின்றனர். தென்னக ரயில்வே நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள அடிப்படை தேவைகளை ஆய்வு செய்து, பயனிகளுகளுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வழிவகை செய்யவேண்டும்’’என்றார்.

Tags : Travelers ,railway station ,Paramakudi ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...