×

நீலகிரியில் நீர்பனி தாக்கம் அதிகரிப்பு

ஊட்டி, செப்.19: நீலகிரி மாவட்டத்தில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்து குளிர் வாட்டுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரண்டு மாதம்   தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து இரு மாதம் கழித்து அக்டோபர் மாதம்  மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த இடைப்பட்ட காலங்களில்  மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் சூரியனை பார்க்க முடியும். அதேசமயம்,  அக்டோபர் மாதம் மழை பொய்த்ததால் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.  பொதுவாக,  அக்டோபர் மாதம் இறுதியில் நீர் பனி விழத்துவங்கும். தொடர்ந்து நவம்பர்  மாதம் முதல் உறைப்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். டிசம்பர் முதல்  பிப்ரவரி வரை கடும் பனி பொழிவு இருக்கும். இச்சமயங்களில் வெப்பநிலை  குறைந்துக் கொண்டே சென்று மைனஸில் சென்று விடும். அப்போது கடும் குளிர்  நிலவும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குறித்த சமயத்தில் பருவமழை  பெய்யாத நிலையில், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனி பொழிவிலும் மாற்றம்  ஏற்படுகிறது. சற்று முன்னதாகவே, பனி விழ துவங்குகிறது. இம்முறையும் பருவமழை  குறித்த சமயத்தில் பெய்யாமல், கடந்த மாதம் முதல் மழை சில நாட்கள் கொட்டித்  தீர்த்தது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் தற்போது நீலகிரி  மாவட்டத்தில் நீர் பனி விழத்துவங்கி உள்ளது.

நேற்று ஊட்டி மற்றும்  சுற்றுப்புற பகுதிகளில் நீர் பனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது.  இதனால், குளிர் வாட்டியது. நீர் பனி முன்னதாகவே விழும் நிலையில், தேயிலை  மற்றும் மலை காய்கறிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குளிரால் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் வெம்மை ஆடைகளுடன் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வலம் வருகின்றனர்.  நேற்று  ஊட்டியில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 8 டிகிரி  செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகாலை நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளதால்  பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...