×

கிராம பகுதிகளில் மலை காய்கறி விதைப்பு பணி தீவிரம்

ஊட்டி,  செப். 19: நீலகிரி மாவட்டத்தல் உள்ள கிராமங்களில் மலை காய்கறி பயிர்  விதைப்பு பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  நீலகிரி  மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், தேயிலை  விவசாயம் மற்றும் மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக,  மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள்  பாதிக்கப்பட்டனர். இந்த முறையும் ஜூன் மாதம் துவங்க வேண்டிய  ெதன்மேற்கு பருவமழை பொய்த்தது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்  அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த  மாதம் துவங்கிய பருவ மழை ஒரு மாதம் கொட்டித் தீர்த்தது. கடந்த வாரம் வரை  மழை பெய்த நிலையில், தற்போது மழையின் தாக்கம் குறைந்து அவ்வப்போது சாரல்  மழை மட்டும் பெய்கிறது.

இதனால், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும்  உள்ள தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என காட்சியளிப்பதுடன், மகசூலும்  அதிகரித்துள்ளது. அதேபோல், அனைத்து பகுதிகளிலும் மலை காய்கறி விவசாயமும்  சூடு பிடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மலைப்பாங்கான பகுதிகளில்  விவசாயிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், தற்போது விவசாயிகள் அனைத்து  பகுதிகளிலும் விதைப்பு பணிகளை துவக்கி உள்ளனர்.
 குறிப்பாக, கேத்தி  பாலாடா, முத்தோரை பாலாடா, நஞ்சநாடு, அணிக்கொரை, எப்பநாடு, தும்மனட்டி,  இடுஹட்டி, தாம்பட்டி, மணியஹட்டி, கெந்தோரை, தேனாடுகம்பை, காந்திநகர்  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் உள்ள விவசாய நிலங்களை மேம்படுத்தி  விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைத்துள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகளுக்கு  மானிய விலையில் விதைகள், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள்  வழங்கினால் விவசாயிகள் பயனடைய வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : areas ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்