×

அபாய நிலையில் மின் கம்பங்கள்

கோவை, செப்.19:  கோவை மாவட்டத்தில் மின் கம்பங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்து அபாய நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.  கோவை மாவட்டத்தில்  சுமார் 20 லட்சம் மின் இணைப்புகள் இருக்கிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. 10 முதல் 15 சதவீத தெரு விளக்கு கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில், மின் கம்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. மின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால், மின் கம்பங்கள் சிலந்தி கூடு போல் மாறி விட்டது.  கனரக வாகனங்கள் அடிக்கடி மின் கம்பங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்துவதும் நடக்கிறது. கான்கிரீட் கம்பங்களுக்கு மாற்றாக அலுமினிய மின்கம்பங்களை அமைக்கும் திட்டம் கடந்த 2010ம் ஆண்டு பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது.  நகரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுமினிய மின்கம்பங்களும், ஸ்பைரல் மின் கம்பங்களும் அமைக்கப்பட்டது. கான்கிரீட் கம்பங்களை விட, அலுமினிய கம்பங்கள் அதிக காலம் நீடிக்கும் என பொறியாளர்கள் கருதுகின்றனர். அலுமினிய கம்பங்களில், கான்கிரீட் கம்பங்களை போல் மின் பணியாளர்கள் ஏறி பழுது பார்க்க முடியாத நிலையிருக்கிறது.

மின் சீரமைப்பு பணிக்கான ஏணி மூலமாகவே அலுமினிய கம்பங்களில் பல்புகளை மாற்ற முடியும். மேலும், மின் இணைப்பு வழங்குவதற்கு அலுமினிய கம்பங்களை பயன்படுத்த முடியாத நிலையிருக்கிறது. நகரில், மின் இணைப்பு பழுது தொடர்பாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் குவிகிறது. மின் கம்பங்களில் பராமரிப்பு பணிகள் மந்த கதியில் நடப்பதால் மின் நுகர்வோர்கள் தவிப்படைந்துள்ளனர். கம்பங்களில் மின் ஒயர் பொருத்த இடமில்லை, மெதுவாக காற்று வீசினாலே ஒயர் அறுத்து விடுகிறது.  மின் வாரியத்தினர் கூறுகையில், ‘‘ கிளாம்ப் பிட்டிங் முறையில் மின் ஒயர்களை பொருத்தி வருகிறோம். கடந்த காலங்களில் சாதாரண முறையில் மின் ஒயர் இணைப்பு தரப்பட்டது. கிளாம்ப் பிட்டிங் செய்தால் வேகமாக காற்று வீசினால் ஒயர் இணைப்பு அறுந்து விடாது. வீடுகள் எண்ணிக்கை அதிகமானதால் மின் கம்பங்களில் இணைப்பு தருவதில் சிக்கல் இருக்கிறது. வீடுகள் அதிகமான இடத்தில் கூடுதல் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது, ’’ என்றனர்.


Tags :
× RELATED பராமரிப்பு இல்லாததால் அருப்புக்கோட்டையில் பாலம் இடியும் அபாயம்