×

ரூ.6.48 கோடி மதிப்பில் வ.உ.சி.பூங்கா சீரமைப்பு பணி தீவிரம்

ஈரோடு, செப். 19:   ஈரோடு வ.உ.சி.பூங்காவில் ரூ.6.48 கோடி மதிப்பில் சீரமைப்பு பணி தீவிரமாக நடக்கிறது.   ஈரோடு வ.உ.சி.பூங்கா 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது இந்த பூங்காவின் ஒருபகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக ராட்ச குடிநீர் தொட்டி கட்டப்பட்டு வரும் நிலையில் மற்றொரு பகுதியில் பூங்காவை சீரமைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.6.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இந்த பூங்கா சீரமைப்பு பணிகளுக்கான டெண்டர் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக., எம்.எல்.ஏ.தென்னரசுவின் மகன் கலையரசனுக்கு சொந்தமான செந்தூர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் எடுத்துள்ளது.
இதற்கான கட்டுமான பணிகள் துவங்காமல் இருந்த நிலையில், பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பூங்காவில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. வ.உ.சி.பூங்காவின் அருகில் உள்ள சிறுவர் பூங்காவிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த இரு பூங்காக்களிலும் பணிகளை விரைந்து முடித்து பொங்கல் பண்டிகையின்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.

  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் தேவையான இடங்களில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பெரிய பூங்காவான வ.உ.சி.பூங்கா மற்றும் சிறுவர் பூங்காவை சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பூங்கா மூடப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இந்த பூங்காக்களில் புல்வெளி, நடைபாதை, சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள், நீரூற்றுகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.   இந்நிலையில் காணும் பொங்கல் பண்டிகையின் போது ஏராளமான பெண்கள் இந்த பூங்காவிற்கு வருவார்கள். அதற்குள் சிறுவர் பூங்காவில் பணிகளை முடித்து காணும் பொங்கல் பண்டிகைக்கு முன் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்றொரு பூங்கா பணிகளை விரைந்து முடித்து ஜூன் மாதம் திறப்பு விழா செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு