×

இன்ஸ்பெக்டரை வெட்டிய தொழிலாளிக்கு ஓராண்டு சிறை

சேலம், செப்.19: சேலத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டரை வெட்டிய சவரத் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் மாநகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர் சொரிமுத்து. இவர் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி இரவு, டூட்டியை முடித்துவிட்டு அஸ்தம்பட்டி நோக்கி டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். வின்சென்ட் அருகே டிபன் சாப்பிடுவதற்காக தனது டூவீலரை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பால் வண்டி ஒன்று, இன்ஸ்பெக்டர் மீது மோதுவது போல சென்றது. இதில், இன்ஸ்பெக்டருக்கும், பால் வண்டி டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பால் வண்டி டிரைவரின் நண்பரான அஸ்தம்பட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சவரத்தொழிலாளி ரவிச்சந்திரன் (38) அவ்வழியாக வந்துள்ளார்.

பின்னர், இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென தான் வைத்திருந்த சவரக்கத்தியால், இன்ஸ்பெக்டர் சொரிமுத்துவின் கழுத்தை அறுத்தார். இதில் பலத்த காயமடைந்த சொரிமுத்துவை அப்பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அஸ்தம்பட்டி போலீசார், ரவிச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முனுசாமி, நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி, இன்ஸ்பெக்டரை வெட்டிய ரவிச்சந்திரனுக்கு, ஓராண்டு சிைற தண்டனை மற்றும் ₹1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : inspector ,jail ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு