×

நாமக்கல் ரயில்வே ஸ்டேசனில் தொடர் கதையாகும் சரக்கு திருட்டு, வழிப்பறி

நாமக்கல், செப்.19: நாமக்கல் ரயில்வே ஸ்டேசனில் சரக்கு திருட்டு, வழிப்பறியில் ஈடுபடும் கும்பலால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.நாமக்கல் வழியாக கடந்த 2012ம் ஆண்டு, ரயில் போக்குவரத்து துவங்கியது. நாமக்கல் ரயில்வே ஸ்டேசனுக்கு, தினமும் 7 ரயில்கள் வந்து செல்கின்றன. இதேபோல வாரம் 3 சரக்கு ரயில்களில் கோழித்தீவன மூலப்பொருட்கள் மற்றும் ரேசன் அரிசி உள்ளிட்டவை கொண்டு வரப்படுகிறது. ஆனால், போக்குவரத்து தொடங்கி 7 ஆண்டுகள் ஆகியும், நாமக்கல் ரயில்வே ஸ்டேசன் மற்றும் கூட்ஸ் ஷெட்டில் போதுமான பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை, ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் ரயில்வே ஸ்டேசனுக்கு வரும் பயணிகள் ஒருவித அச்சத்துடனே வந்து செல்கிறார்கள். நாமக்கல் ரயில்வே ஸ்டேசன் அமைந்துள்ள சேந்தமங்கலம் ரோட்டில், இரவு நேரத்தில் போதுமான பஸ் வசதி கிடையாது. இரவில் வரும் ரயில்களில் பயணித்து நாமக்கல்லுக்கு வருபவர்கள், ஆட்டோ மூலம் தான் நாமக்கல் வரவேண்டும். அவ்வாறு இரவில் வரும் பயணிகளிடம், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு ₹100 முதல் ₹150 வரை  ஆட்டோ டிரைவர்கள் வாங்குகிறார்கள். ஆட்டோவை விட்டால், வழிப்பறி கொள்ளையர்களிடம் மாட்டிக் கொள்ளும் அபாயம் உள்ளதால், வேறு வழியின்றி, அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் மக்கள் பயணிக்கிறார்கள். இதுதவிர, ரயில்வே ஸ்டேசனில் இருந்து பயணிகள் வெளியே வரும் பாதையில் உள்ள பாலத்தில், போதுமான மின்விளக்கு வசதி இல்லை. இதனை பயன்படுத்தி, வழிப்பறி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டுகிறார்கள். இதனால் இரவில் வரும் பயணிகள், ஒருவித பீதியுடன் தான் ரயில்வே ஸ்டேசனை கடந்து செல்ல வேண்டியுள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்குள் உள்ள சுரங்கபாதையும், எந்த பராமரிப்பும் இன்றி இருப்பதால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ரயில்வே ஸ்டேஷனில், குடிநீர் வசதி, கேன்டீன் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.

 ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கூட்ஸ் ஷெட்டும் எந்தவித பாதுகாப்புமின்றி இருக்கிறது. வெளிநபர்கள் எளிதில் நுழையும் வகையில் இருப்பதால், இரவில் நாமக்கல் வரும் சரக்கு ரயிலில் இருந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சரக்குகளை திருடி செல்கிறார்கள். குறிப்பாக ரேசன் அரிசி, மக்காசோளம் போன்றவை அதிகம் திருட்டு போகிறது. இதை தடுக்கும்படி லாரி டிரைவர்கள் மற்றும் கூட்ஸ் ஷெட் சுமைதூக்கும் தொழிலாளர்கள், ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், போலீசாரின் கண்காணிப்பு சரியாக இல்லாததால், தொடர் திருட்டுகள் அரங்கேறி வருகிறது. இது குறித்து கூட்ஸ் ஷெட் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், ‘சரக்கு ரயிலில் வரும் சரக்குகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இரவில் அதிகமாக திருட்டுகள் நடக்கிறது. இது பற்றி ரயில்வே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கூட்ஸ் ரயில்கள் மற்றும் சரக்கு இறக்கும் இடங்களில், வெளிநபர்கள் நுழையாமல் தடுக்க, சுற்றிலும் கம்பிவேலி அமைத்து சரக்கு திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : railway station ,Namakkal ,cargo thefts ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...