×

நாமக்கல்லில் கடமைக்கு நடந்த சைக்கிள் போட்டி

நாமக்கல், செப்.19: நாமக்கல்லில் அண்ணா பிறந்த தினத்தையொட்டி நடத்தப்பட்ட சைக்கிள் போட்டியில், 24 மாணவ, மாணவியர் மட்டுமே கலந்து கொண்டனர். போட்டியை கடமைக்காக அதிகாரிகள் நடத்தியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாமக்கல்லில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணா விரைவு சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையே நேற்று நடத்தப்பட்டது. போட்டியை நாமக்கல் சப்கலெக்டர் கிராந்திகுமார்பதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலக வாயிலில் துவங்கிய போட்டிகள், ஆயுதப்படை மைதான சாலை வழியாக சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீச்சல்குளம் அருகே நிறைவடைந்தது. சுமார் 2 கிமீ தூரத்துக்கு சைக்கிள் போட்டி என அறிவிக்கப்பட்ட போதும், குறைந்த தொலைவுக்கே போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வழக்கமாக அண்ணா பிறந்த தினத்தையொட்டி நடைபெறும் சைக்கிள் போட்டியில், 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொள்வார்கள். போக்குவரத்து அதிகம் இல்லாத காலை நேரத்திலேயே போட்டிகள் நடத்தப்படும். ஆனால், நேற்று நடைபெற்ற போட்டியில், 24 மாணவ, மாணவியர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியர் ஆவர். போட்டியில் கலந்து கொள்ள வந்த அனைவரிடமும் சைக்கிள் இல்லை. இதனால், அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்து 4 சைக்கிள், சைக்கிள் கடைகளில் வாடகைக்கு 8 சைக்கிள்களை விளையாட்டு அலுவலர்கள் எடுத்து வந்து போட்டியை நடத்தினார்கள்.

 போட்டியின் போது, வடகைக்கு எடுத்து வரப்பட்ட ஒரு சைக்கிளில் செயின் துண்டாகி விட்டது. இதனால் அந்த மாணவர் சைக்கிளை தள்ளி கொண்டே வந்தார். மாணவ, மாணவியர் இடையே அன்பையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கவே, அரசு சார்பில் சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு போட்டிகளை ஏற்பாடு செய்த மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர்கள் பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பி மாணவ, மாணவியரை அழைத்து வராமல், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு விடுதியில் உள்ள மாணவ, மாணவியரை வைத்து, பெயரளவுக்கு கடமைக்கு போட்டியை நடத்தினார்கள். 

Tags : Bicycle competition ,Namakkal ,
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம்