×

திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை வழியாக புதிய இரவு விரைவு ரயில்

நெல்லை, செப். 19: திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை வழியாக புதிய இரவு விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நெல்லை தொகுதி எம்பி ஞானதிரவியம் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் வலியுறுத்தியுள்ளார். திருவனந்தபுரம், பாலக்காடு ரயில்வே கோட்டங்களைச் சேர்ந்த எம்பிக்களுடன் திருவனந்தபுரத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நெல்லை தொகுதி எம்பி ஞானதிரவியம் கலந்து கொண்டு நெல்லையின் ரயில் தேவைகள் குறித்து ராகுல் ஜெயினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ள வள்ளியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் முதலாவது பிளாட்பாரத்தில் நிற்க வேண்டும். மேலும் வள்ளியூர் ரயில் நிலையத்தில் முழுவதும் மேற்கூரை அமைக்க வேண்டும். பயணிகள் காத்திருப்பு அறையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கி அதை சீரமைக்க வேண்டும். வள்ளியூர் ரயில் நிலையத்தில் உள்ள கிணற்றை பாதுகாத்து பயணிகள் மற்றும் ரயில் நிலைய ஊழியர்கள் பாதுகாப்பான தண்ணீர் அருந்தும் வகையில் அதை மூடி போட்டு வைக்க வேண்டும்.

தற்போது சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை வண்டி எண்.06008 என்ற ரயில் வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பதுடன், அந்த ரயிலை மறுநாள் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு நெல்லை, மதுரை, திருச்சி மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு இயக்கவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு வேளாங்கண்ணியில் இருந்து நாகர்கோவிலுக்கு அதே வழித்தடத்தில் இயக்கவும் வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து   திங்கள் காலை நாகர்கோவிலுக்கு வந்து சேரும் இந்த  வண்டி எண்.06008 ரயிலை அன்று மாலை மீண்டும்  சென்னைக்கு இயக்க வேண்டும்.  மேலும் நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டிருக்கும் காந்திதாம் - நாகர்கோவில் ரயிலை நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வரை இயக்கலாம். காவல்கிணறு ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் அமைய முதல் தவணைத்தொகை கட்டப்பட்ட பின்னும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. எனவே விரைந்து காவல்கிணற்றில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க வேண்டும். மதுரை - புதுடெல்லி சம்பர்க் கிரந்தி விரைவு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். நாகர்கோவில் - சென்னை ரயிலை (வண்டி எண்12679, 12680) திருச்சி செல்லாமல் மதுரை, சேலம், நாமக்கல் வழியாக இயக்க வேண்டும். திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பணகுடி ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும்.

நாங்குநேரி - வள்ளியூர் இடையே உள்ள ரயில்வே கிராசிங்கில் எந்த தடையுமின்றி விரைந்து பாலம் அமைக்க வேண்டும். திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக இரவு ரயில் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாங்குநேரி - வள்ளியூர் ரயில்வே பாதையில் உள்ள கேட் எண்.100ஐ எந்தக் காரணத்தை கொண்டும் மூடக் கூடாது. அவ்வாறு மூடினால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே இந்த கேட்டை மூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே துறையால் இருவழிப்பாதை வேலைகள் மிகவும் மெதுவாக நடக்கிறது. அதை விரைவுபடுத்த வேண்டும். நாகர்கோவில் - மும்பை ரயில் பெட்டிகள் 25 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. எனவே அவற்றை எல்எச்பி ரேக் கொண்ட புதிய கோச்சுகளாக மாற்றி இயக்க வேண்டும். வாரம் இரு முறை திருப்பதி வரை செல்லும் மும்பை ரயிலை (வண்டி எண்.16351) வாரம் மூன்று முறை இயக்க வேண்டும். நாகர்கோவில், திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லைக்கு ‘இஎம்யூ’ ரயில் வசதியில்லை. இந்த வசதி கொண்ட ரயிலை இயக்க வேண்டும். நெல்லைக்கு டொரண்டோ ரயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மும்பை - கொச்சுவேலிக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

நெல்லை எக்ஸ்பிரசில் ‘எச்ஏ1’ பெட்டி

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டி அல்லது  முதல் வகுப்பும், குளிரூட்டப்பட்ட இரண்டாவது வகுப்பு பெட்டியும் சேர்ந்து ‘எச்ஏ1’ பெட்டியை சேர்த்து இயக்க வேண்டும் என மனுவில் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தியுள்ளார். வேளாங்கண்ணிக்கு வாரம் மும்முறை ரயில் நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க கோரியிருந்ததேன்.  வேளாங்கண்ணிக்கு கடந்த ஜூலை 31ம் தேதியும் ஆக.7ம் தேதியும் ஆகிய இரண்டு  நாட்கள் மட்டும் ரயிலை இயக்கி நிறுத்தி விட்டனர். எனவே நாகர்கோவில் -  வேளாங்கண்ணிக்கு வாரம் மூன்று முறை ரயில் இயக்க வேண்டும் என ஞானதிரவியம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Thiruvananthapuram ,
× RELATED டெல்லியில் இருந்து 350 பேருடன் சிறப்பு ரயில் நெல்லை வருகை