சங்கரன்கோவிலில் விடுதியில் தங்கியிருந்த வாலிபர் தற்கொலை கள்ளக்காதலியிடம் போலீஸ் விசாரணை

சங்கரன்கோவில், செப். 19: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் வட்டம் டி.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் நாகராஜ் (33). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. குடிப்பழக்கமும் இருந்து வந்தது. நாகராஜிக்கும், இதே ஊரை சேர்ந்த மாரிதாஸ் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் நாகராஜிக்கு குடும்பத்தினர் திருமணம் நிச்சயம் செய்தனர். இதனால் கள்ளக்காதலியிடம்  இருந்து தன்னை பிரித்து விடுவார்களோ என கவலையடைந்த நாகராஜ், ஐஸ்வர்யாவை அழைத்து கொண்டு சங்கரன்கோவில் வந்துள்ளார்.  பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று காலை ஐஸ்வர்யா கண் விழித்து பார்த்தபோது விடுதியில் உள்ள மின்விசிறியில் நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவம் குறித்து விடுதி ஊழியர்களிடம் தெரிவிக்கவே, அவர்கள் சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். டவுன் போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து கள்ளக்காதலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED இறந்து கிடந்த நபர் யார் போலீசார் விசாரணை