×

காலாவதியான உணவு பொருட்களை பயன்படுத்தி சமையல் செய்ய கூடாது

நாகை,செப்.19: நாகை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஒருநாள் பணியிடை பயிற்சி நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செபஸ்தியம்மாள் தலைமை வகித்தர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது ஜலீல் வரவேற்றார். நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் பயிற்சி அளித்தார். அப்போது சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு சமைக்கும்போது உணவை நேரடியாக கையாளும் சமையலர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் தன் சுத்தத்தை பேண வேண்டும். கைகளில் நகங்கள் வளர்க்க கூடாது. சமைப்பதற்கு முன்னும், பின்னும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமைக்கும் பொழுது அரசால் வழங்கப்பட்டுள்ள ஏப்ரான், தலை கவர் மற்றும் கை கிளவுஸ் ஆகியவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும். சமைப்பதற்கும் குடிப்பதற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சமைக்கும் இடமும் பரிமாறும் இடமும் சுத்தமாக சுகாதாரமாக இருக்க வேண்டும். காலாவதியான உணவு பொருட்களை கொண்டு சமைக்க கூடாது. சமைக்கப்பட்ட உணவு பரிமாரப்படுவதற்கு முன் மாதிரி உணவு எடுத்து வைக்க வேண்டும். பாதுகாப்பான உணவுகளை குழைந்தைகளுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.நாகை நிலைய தீயணைப்பு அலுவலர் ஜெயகுமார் பணிபுரியும் இடத்தில் ஏற்படக்கூடிய தீ விபத்துக்களை தடுப்பது தொடர்பாக செயல் விளக்கம் செய்து காண்பித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வெற்றிச் செல்வன், நாகூர் தேசிய தொடக்கப் பள்ளி அமைப்பாளர் ராஜூ மற்றும் பலர் பயிற்சியளித்தனர்.


Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்