×

குடிநீர் விநியோகம் செய்வதில் நகராட்சி அதிகாரிகள் பாரபட்சம்

கள்ளக்குறிச்சி, செப். 19: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு திருக்கோவிலூர் சுந்தரேசபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் சுமார் 6 முதல் 7 லட்சம் லிட்டர் குடிநீர் நகராட்சி மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீரை ஏமப்பேர் பகுதியில் உள்ள ஜம்புவில் தேக்கி வைத்து அண்ணா நகர், கரியப்பா நகர், தீயணைப்பு நிலையம் பகுதி, கேசவேல் நகர், காவல் நிலையம் பகுதி, ராஜா நகர் ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏமப்பேர் பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறு மற்றும் ஏமப்பேர் ஏரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி பெரிய ஏரியில் புதியதாக வெட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரபட்ட கிணற்றில் இருந்தும் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றிவைத்து விநியோகம் செய்யபடுகிறது. மேலும் பசுங்காய் மங்கலம், டிஎம்எஸ் நகர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆழ்குழாய் கிணறுகளில் இருந்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தினமும் தண்ணீர் ஏற்றிவைத்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

ஆனால் குடிநீர் விநியோகம் செய்வதில் நகராட்சி அதிகாரிகள் பாரபட்சத்துடன் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆளும் கட்சி நிர்வாகி தலையீடு காரணமாக இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதாவது ராஜா நகர், கடை வீதி, கச்சேரி சாலை, சேலம் மெயின்ரோடு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை 30 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை தெரு பைப்லைனில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், ஆனால் கவரை தெரு, பெருமாள் கோயில் தெரு, இடையர் சந்து, கிராமசாவடி தெரு, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை 5 நிமிடம் முதல் 10 நிமிடம் மட்டுமே தெரு பைப்லைனுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஏழைமக்கள் வசிக்கும் பகுதிகளை புறக்கணித்து விட்டு, வசதி படைத்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டும் நகராட்சி நிர்வாகம் தாராளமாக குடிநீர் விநியோகம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசியல் தலையீடு காரணமாக ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்த்து குடிநீர் விநியோகம் செய்து வரும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாரபட்சமின்றி அனைவருக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED சேலத்தில் விதிகளை மீறி செயல்பட்டு...