×

அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு

புதுச்சேரி, செப். 19:  நில விற்பனை ஒழுங்குபடுத்தல் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். மனை விற்பனை மற்றும் ஒழுங்குபடுத்துதல் மேம்படுத்தல் சட்டம் கடந்த  2013ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் 2016ம் ஆண்டு மே மாதம் அமலுக்கு வந்தது.  மனைவாங்குபவருக்கு ஏற்படும் குழப்பங்கள் மற்றும் முறைகேடுகள் கட்டுமானங்களில் ஏற்படும் விபத்துகள்   குறித்து ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  எனவே நில வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஏற்ப சட்டவரையறையை உருவாக்கி  மாநில அரசு  தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் ரியல் எஸ்டேட் ரெகுலேஷன் அத்தாரிட்டி என்ற குழுவினை உருவாக்கி பொறுப்பாளர்களை நியமிக்கவும் அறிவுறுத்தியது. அதற்கேற்ப புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால்  இதனை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை.    

குறிப்பாக மனைகள் பிரிப்பவர்கள், குடியிருப்பு கட்டுவோர் தங்களின் வரைபடம், வாங்குவோர், விற்பவர் உள்ளிட்ட விபரங்களை ரெரா வலைதளத்தில் பதிவு செய்து, அதற்கான அனுமதியை பெறுதல் அவசியம். மனைவிற்பனை செய்வதில் அனுபவம் கொண்ட மற்றும் சட்டம், வணிகத்துறை சார்ந்த முழுநேர ஊழியர்களை குழுவில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.  மனை விற்பனையில் பிரச்னைகளை உடனடியாக தீர்வு காண  மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றை துவங்கி விசாரிக்க வேண்டும். அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவோர், அதற்கு ஈடான தொகையினை 70 சதவீதம் டெபாசிட்டாக செலுத்திய பிறகே பணிகளை துவங்க அனுமதி வழங்கப்படும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அந்த தொகையில் இருந்து பணத்தை திரும்ப செலுத்தும் வகையில் முன்னெற்பாடுகளை செய்தல் வேண்டும். மனை வாங்குவோர் அதற்கான பணத்தை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கொடுக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம்.

இந்த சட்டத்தை மீறினால் 3 ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது 10 சதவீதம் அபராதம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் நில வணிகம் செய்வோருக்கு இத்தகைய வழிகாட்டுதல் ஏதும் அரசு முறைப்படி தெரிவிக்கவில்லை. புதுச்சேரியில் ரெரா விதிகளை முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெயருக்கு மட்டுமே அமல்படுத்திவிட்டதாகவும், இது குறித்து எங்களுக்கே புரிதல் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். இதனால் நில வணிகம் செய்வோர், பெரும் பாதிப்புகளை அடைந்து வருகிறார்கள்.  இன்னமும் சரியான  வழிகாட்டுதல்  இல்லாததால் மனை விற்பனை செய்தல், வாங்குதல், பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக  ரியல் எஸ்டேட் தொழில் கடுமையான பாதிப்புகளை சந்தித்து  வருகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம்,  ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் பத்திரப்பதிவு அதிகாரிகள், புதுச்சேரி நகர அமைப்பு குழும அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ரெரா விதிகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல் ஏதும் இல்லாததால் நில வணிகம் செய்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வாங்குதல், விற்பனை  உள்ளிட்ட பணிகள் பாதிப்பதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இது தொடர்பான விரிவான அறிகையை தாக்கல் செய்யுமாறு  வருவாய்த்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப உரிய திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...