×

பிஆர்டிசி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது

புதுச்சேரி,  செப். 19:     புதுச்சேரியில்  அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பிஆர்டிசி  ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் 300 ஒப்பந்த ஊழியர்கள் உட்பட மொத்தம் 900 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 125 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக பிஆர்டிசி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதை உடனே வழங்கக்கோரியும், கடந்தாண்டு அறிவித்த போனஸ் தொகையை வழங்க வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் பிஆர்டிசி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதையடுத்து பிஆர்டிசி பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் தொலைதூர பஸ்களும் இயக்கப்படாத நிலையில் முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பி தரப்பட்டது. அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ள இப்போராட்டம் 2வது நாளாக நேற்றும் நீடித்தது. ஊழியர்கள், பேருந்துகளை இயக்காமல் பணிமனையில் நிறுத்தி, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் பயணிகள், தொழிலாளிகள் அவதிப்பட்டனர். இதனால் கடலூர், விழுப்புரம், திண்டிவனத்துக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.

இதற்கிடையே பணிமனைக்கு வந்த ஊழியர்கள், நுழைவு வாயில் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணிக்கு வந்த அதிகாரி புஷ்பராஜை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலுவையில் உள்ள மாத ஊதியம் மற்றும் போனஸ் தொகையை ஊழியர்களுக்கு வழங்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அசம்பாவிதத்தை தடுக்க பணிமனை முன்பு உருளையன்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி காரைக்கால், மாகே, ஏனாம் பகுதியிலும் பிஆர்டிசி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, பிஆர்டிசி ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சர் ஷாஜகான் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. போக்குவரத்து ஆணையர் சிவகுமார், பிஆர்டிசி மேலாண் இயக்குநர் குமார், பொதுமேலாளர் ஏழுமலை மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 அப்போது அமைச்சர் ஷாஜகான், நிலுவையில் உள்ள 3 மாத சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் தொகை நாளை (இன்று) வழங்குவதாகவும், அடுத்த காபினட் கூட்டத்தில் முடிவெடுத்து 7வது ஊதியக்குழு சம்பளம் வழங்குவதாகவும், ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக ஒரு மாதத்தில் மாற்றுவதாகவும் உறுதியளித்தார். ஆனால், ஒப்பந்த ஊழியர்கள் அதனை ஏற்கவில்லை. தங்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு தற்போது வாய்ப்பு இல்லை என அமைச்சர் தெரிவித்து, அங்கிருந்து சென்று விட்டார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் ஊழியர்களின் ஸ்டிரைக் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.

Tags : BRTC ,
× RELATED தினமும் நடுரோட்டில் பழுதாகி நிற்கும்...