×

அரசு கல்லூரி மாணவர்கள் 2வது நாளாக போராட்டம்

கடலூர். செப். 19:  கடலூரில் நேற்று 2வது நாளாக அரசு பெரியார் கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவிகளும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், கடந்த இரு நாட்களாக கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று இரண்டாம் நாளாக கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டு முழக்க போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திடீரென தேர்வு கட்டணத்தை உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பாதிக்கும். எனவே, உடனடியாக அதனை திரும்பப் பெற வேண்டும்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு அரசு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட கூடாது. அதுபோல் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் வகையில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசு அதனை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருவதாக கூறினர். இதேபோல், நேற்று கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவிகளும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Government college students ,
× RELATED ஊட்டி அரசு கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி