×

இரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் இல்லாத பெரியாறு அணை

கூடலூர், செப். 17: பெரியாறு அணையில் இரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் நியமிக்கப்படாததற்கு விவசாயிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு, கம்பத்தில் பெரியாறு அணை சிறப்பு கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு பணியிலுள்ள செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் இருவரும் பெரியாறு அணை துணை கண்காணிப்புக்குழுவில் தமிழக பிரதிநிதியாக உள்ளனர். பெரியாறு அணை செயற்பொறியாளராக இருந்த மாதவன் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். அன்று முதல் பெரியாறு வைகை வடிநிலக்கோட்டம் மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி கூடுதல் பொறுப்பாக பெரியாறு அணை செயற்பொறியாளராகவும், சாம் இர்வின் உதவி செயற்பொறியாளராகவும், துணைக்குழுவில் தமிழக பிரதிநிதிகளாகவும் இருந்து வந்தனர்.பெரியாறு அணையின் கூடுதல் பொறுப்பு அதிகாரிகளை தவிர்த்து நிரந்தரமாக செயற்பொறியாளரை பணியில் அமர்த்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, 2019ம் ஆண்டு பிப்ரவரியில், பதவி உயர்வு பெற்ற விஜிபாபு பெரியாறு அணை செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், மார்ச் மாதம் இவர் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து மீண்டும் சுப்பிரமணி கூடுதல் பொறுப்பாக பெரியாறு அணை செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் நியமித்த, கண்காணிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி, பெரியாறு அணையில் பேபி அணைய பலப்படுத்துவது, வல்லக்கடவு வழியாக பாதை அமைத்தல், பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டுவருதல், பல ஆண்டுகளாக தேக்கடியில் இயக்கமுடியாமல் இருக்கும் தமிழக பொதுப்பணித்துறையின் `தமிழ் அன்னை’ படகுக்கு அனுமதி பெறுதல் போன்ற பணிகள் எதுவும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை.
 துணைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்தி சொல்ல பெரியாறு அணைக்கு நிரந்தர செயற்பொறியாளர் நியமிக்க வேண்டும் என்றும், இரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் நியமிக்கப்படாததற்கு தமிழக அரசுக்கு விவசாயிகள் கண்டனமும் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராஜீவ் கூறுகையில், ``முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்திற்கு ஒவ்வொரு வழியிலும் கேரள அரசு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறது. நாள்தோறும் ஒரு பிரச்னையை கொண்டு இருக்கிறது. அதை திறன்கொண்டு எதிர்கொள்ள வேண்டும். தமிழக பொது ப்பணித்துறையில் கடந்த இருமாதங்களில் சுமார் 90 செயற்பொறியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டப்போது, முல்லைப்பெரியாறு பிரிவில் நிரந்தர பணிபுரியும் ஒரு அதிகாரியை நியமிக்காதது வெட்கக்கேடான செயல். இதிலிருந்தே முல்லைப்பெரியாறு அணையில் இழந்த தமிழகத்தின் உரிமையை மீட்பதிலும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதிலும் தமிழக பொதுப்பணித்துறைக்கு அக்கறையில்லை என்பது தெளிவாகத்தெரிகிறது. இரண்டரை ஆண்டுகளாக நிரந்தர செயற்பொறியாளர் இல்லாத பெரியாறு அணைக்கு உடனே நிரந்தர அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும்’’
என்றார்.


Tags : Periyar Dam ,operator ,
× RELATED முல்லை பெரியாறு அணை பகுதிகளில் ஆய்வு...