×

செவிலியர் இல்லாததால் பூட்டி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் அவதியில் கர்ப்பிணி பெண்கள்

தொண்டி, செப்.17:  நம்புதாளையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் நியமிக்கப்படாததால் பூட்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சியில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி இதுவாகும். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இப்பகுதி அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பயனாக இருந்து வந்தது. கடந்த வருடம் செவிலியர் மாற்றலாகி சென்ற பின்னர் இன்று வரையிலும் வேறு செவிலியர் நியமிக்கப்படாததால் பூட்டி கிடக்கிறது. வாரத்தில் சில நாள்கள் மட்டுமே வருவதாக அதிகாரிகள் கூறினாலும், எப்போது வருவார்கள் என பொதுமக்களுக்கு தெரிவதில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர். கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் இங்கு அதற்கு ஆள் இல்லாததால் தொண்டி மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

மேலும் மாதந்ேதாறும் நடைபெறும் பரிசோதனைக்கும் அங்கு செல்ல வேண்டியுள்ளது. காய்ச்சல் மற்றும் அனைத்து வித நோய்களுக்கும் தனியார் மருத்துவமனைக்கே செல்வதால் பொருள் செலவும் அதிகமாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குக்கிராமங்களில் எல்லாம் செவிலியர் இருக்கும் பட்சத்தில் பெரிய ஊராட்சியில் செவிலியர் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மாவட்ட அதிகாரிகள் உடனடியாக இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து செவிலியரை நியமிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து தவ்கித் ஜமாத் மாவட்ட செயலாளர் செய்யது நெய்னா கூறியது, ‘‘அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியே கிடப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. கடந்த காலங்களில் இம்மருத்துவமனையில் அதிகமான பிரசவம் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைத்து நோய்களுக்கும் இரவு பகல் நேரங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இன்று தனியார் மருத்துவமனைக்கே செல்ல வேண்டியுள்ளது. அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு சாதகமாக செயல்பட்டு இங்கு செவிலியரை நியமிப்பதில் காலதாமதம் செய்வதாக தெரிகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை. உடனடியாக செவிலியரை நியமிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : women ,nurses ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...