×

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் மாற்றுச்சாலை அமைக்காமல் நடைபெற்று வரும் பாலப்பணி பள்ளி வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு

சிவகங்கை, செப். 17: சிவகங்கை அருகே சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாற்று பாதை முறையாக அமைக்காததால் பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் இருந்து பொன்னாம்பட்டி, அரசனிபட்டி, வஸ்தாபட்டி, இலுப்பக்குடி செல்லும் பிரதான சாலையில் தொழிலாளர் நல அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்டவை உள்ளது. இந்த சாலையில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. மாற்றுப்பாதை அமைக்காமல் பாலத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டதால் சாலையை மக்கள் பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை பள்ளி மாணவ, மாணவியர் ஏற்றி வந்த வாகனம் சாலை அருகே மாற்று வழியில் செல்ல முற்பட்டபோது மணல், சகதியில் சிக்கி கவிழ்ந்து நின்றது. இதில் பள்ளி குழந்தைகள் இருந்தனர். யாருக்கும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இதுகுறித்து கிராமத்தினர் கூறியதாவது: சாலை அமைக்கும் பணி துவக்கத்திலேயே அரை, குறையாகவும், அலட்சியமாகவும் நடந்து வருகிறது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. மாற்று வழி ஏற்பாடு இல்லாததால் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

Tags : school ,Palwani ,replacement road ,Kanjirangal ,Sivagangai ,
× RELATED மே 31-க்குள் பள்ளிகளுக்கு நோட்டு,...