×

மணல் தட்டுப்பாட்டால் பாதியில் நிற்கும் கட்டிட பணி வேலையிழந்த தொழிலாளர்கள்

ஆர்.எஸ்.மங்கலம், செப்.17:  ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை தாலுகா பகுதி முழுவதும் மணல் தட்டுப்பாட்டால் கட்டிட பணிகள் முடக்கியுள்ளது.  திருவாடானை தொண்டி உப்பூர், ஆனந்தூர், திருப்பாலைக்குடி மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் கிடைக்காமல் கட்டிடப்பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. முன்பு எஸ்.பி.பட்டிணம், கூகுடி போன்ற பகுதிகளில் அரசு மணல் குவாரி நடைபெற்றது. அப்போது கட்டுமான பணிகளுக்கு தடையில்லாமல் மணல் குறைந்த விலையில் கிடைத்தது. குவாரிகளை மூடிய பிறகு கட்டுமான தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் கட்டி வருகின்றனர். ஆனால் அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையில் வீடு கட்டுவது என்பது முடியாத நிலையில் உள்ளது. முன்பு ரூ.6 ஆயிரத்திற்கு வாங்கிய ஒரு லோடு மணல், இன்று திருட்டு மணல் ஒரு லோடு சுமார் 25 ஆயிரம் வரை கொடுத்து வாங்கி கட்டும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், அரசாங்கம் ஏழை மக்களுக்கு காங்கிரீட் வீடு கொடுப்பது மிகவும் மகிழ்ச்சி. ஆனால் அரசு கொடுக்கும் பணத்தில் வெறும் மணல் மட்டும் தான் வாங்க முடியும். அரசு குவாரி மூலம் 4 லோடு மணல் வாங்கும் பணத்தில் திருட்டு மணல் 1 லோடுதான் வாங்க முடிகின்றது. அப்புறம் எப்படி செங்கல், சிமென்ட் கம்பி போன்ற மூலப்பொருள்கள் வாங்கி நாங்கள் வீடு கட்டுவது. இதில் இருந்து  மீண்டு நாங்கள் கட்டும் வீடுகளை பூர்த்தி செய்ய ஆர்.எஸ்.மங்கலம் கோட்டை கரை ஆறு கோவிந்தமங்கலம் ஆறு மற்றும் எஸ்.பி.பட்டிணம் பாம்பாறு பகுதிகளில் அரசு மணல் குவாரி திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  அத்துடன் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள பறிமுதல் மணலை பசுமை வீடு, அனைவருக்கும் வீடு போன்ற அரசு ஒதுக்கீட்டின் கீழ் வீடு கட்டும் ஏழை,எளிய பயனாளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு வழங்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டால் கட்டிட வேலைக்கு செல்பவர்களுக்கு பெரும்பாலம் வேலை கிடைக்காமல் திண்டாடி வரும் நிலை உள்ளது. ஆகையால் உடனே மணல் குவாரியை திறந்து கட்டிட தொழிலாளர்களுக்கும், மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும் உள்ள கஷ்டத்தை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Half ,
× RELATED தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் செல்போனை ‘OFF’செய்யுங்க!