×

பழநி பகுதி கிராமங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தியால் பதற்றம் பள்ளிகளில் குவிந்த பெற்றோரால் பரபரப்பு

பழநி, செப். 17:  பழநி பகுதி கிராமங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவிய வதந்தியை நம்பி பள்ளிகளில் குவிந்த பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது.
 பழநி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்த 14 வயது சிறுவன் பெற்றோர் திட்டியதால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினான். பல இடங்களில் தேடியும் மகனை  காணாத பெற்றோர் இதுதொடர்பாக ஆயக்குடி போலீசில் புகார் செய்தனர். மேலும் சிறுவனின் உறவினர்கள் அவனது படத்தை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மாயமாகிவிட்டதாகவும், யாராவது பார்த்தால் தகவல் தெரிவிக்குமாறு கூறி பதிவிட்டிருந்தனர். குழந்தை மாயம் என்ற தகவல் பழநி பகுதியில் வேகமாக பரவியது. போலீசாரும் பல்வேறு இடங்களில் சிறுவனை தேடினர்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் பழநியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளான். இதுதொடர்பாக சிறுவனின் உறவினர்கள், அவரது பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்து அனுப்பி வைத்து விட்டனர். இதற்கிடையே குழந்தை மாயமான தகவல் பழநி அருகே பாலசமுத்திரம் போன்ற கிராமங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரவியது. இதுதொடர்பாக பள்ளிவாசல் போன்ற வழிபாட்டு தலங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் பதட்டமடைந்த கிராமமக்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் முன்பு குவிந்தனர். தங்களது குழந்தைகள் நலமாக உள்ளதை பார்த்த பின்பே பரவிய தகவல் வதந்தி என உணர்ந்து திரும்பி சென்றனர். திடீர் வதந்தியால் பழநி கிராமமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

Tags : children ,villages ,Palani ,tension schools ,parents ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...