×

நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை

திருச்சி, செப்.17: மண்ணச்சநல்லூர் தாலுகா கொணலை, கல்பாளையம் கிராமங்களில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வாய்க்கால் அல்லது ஆற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு ஒத்துழைப்பு தருவோம் என்று கலெக்டரிடம் உறுதியளித்தனர். திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். குடிசை மாற்று வாரியம் குடியிருப்போர் சங்கம் சார்பில் அளித்த மனுவில், ‘மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலம் எம்ஜிஆர் நகரில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள (ஓராண்டுக்கு முன்னால்) சுமார் 512 குடியிருப்பு வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு மாநகரின் வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ள தினக்கூலி தொழிலாளர்களாகிய எங்களுக்கு வீடு ஒதுக்கி குடியமர்த்தப்பட்டோம். ஆனால் குடியிருப்புவாசிகளுக்கு போதிய தண்ணீர் மற்றும் குடிநீர் வசதி இல்லை. வாரியம் மூலம் அமைத்த 9 போரில் சிறிதளவு தான் தண்ணீர் வருகிறது. உரிய தண்ணீர் வசதி செய்து தரவேண்டும். தவிர சாக்கடைகள் முறையாக வடிகால் வசதி இல்லாமல் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் எங்கள் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.

கல்பாளையம் கிராம முன்னேற்ற சங்கத்தினர் அளித்த மனுவில், ‘மண்ணச்சநல்லூர் தாலுகா கல்பாளையம் மற்றும் கொணலை கிராமம் கொணலை ஊரட்சிக்குட்பட்டது. புவியமைப்பு, நிலவியல் அடிப்படையில் எங்கள் கிராமம் மேட்டுப்பகுதியில் உள்ளது. ஆதலால் காட்டாறு, பாசன வாய்க்கால் போன்ற எந்தவொரு நீர்வரத்தும் கல்பாளையம் கிராமத்துக்கு அறவே இல்லை. பருவமழையை மட்டுமே நம்பி உள்ளோம். கடந்த பல ஆண்டாக பருவமழை பொய்த்துவிட்டதால் கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்கு கீழே சென்றுவிட்டது. விவசாயமும் அழிந்துவிட்டது. கால்நடை வளர்ப்பு பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கல்பாளையம், கொணலை கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான பெரிய ஏரிக்கும், கிராமத்துக்கும் அருகில் பாய்ந்தோடும் புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால் மற்றும் உப்பாறு ஆகிய ஆறுகளில் ஏதாவது ஒரு ஆற்றிலிருந்து மழை வெள்ளம் காலங்களில் உபரியாக செல்லும் நீரை மின் விசை பம்பு நீரேற்று நிலையம் அமைத்து குழாய் மூலமாக கிடைக்க செய்ய வேண்டும். இந்த உயிருள்ள திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கினால் அரசுடன் இணைந்து திட்டத்திற்கான பங்கீடு தொகையோடு ஒவ்வொரு பொது மக்களும், எங்களால் முடிந்த அளவுக்கு அதிகபட்ச நிதி பங்களிப்பை வழங்க தயாராக உள்ளோம்.  இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி உள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Tags : meeting ,Collector ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...