×

தாசில்தாரிடம் மனு கொடுக்க மாட்டு வண்டியில் வந்த இளைஞர்கள்

லால்குடி, செப்.17: லால்குடி அடுத்த லால்குடி-ஆனந்திமேடு செல்லும் சாலையை சீரமைத்து நன்னிமங்கலம் சாத்தமங்கலம் வழியாக பஸ் இயக்ககோரி 5 கிராம மக்கள் மாட்டுவண்டியில் சென்று தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த நன்னிமங்கலம், சென்னிவாய்க்கால், சாத்தமங்கலம், மும்முடிசோழமங்கலம் வழியாக ஆனந்திமேடு வரை உள்ள பல்வேறு கிராமங்கள் பயன்படும் வகையில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து லால்குடி வழியாக ஆனந்திமேடு வரை பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லால்குடியில் ரயில்வே மேம்பால பணி மற்றும் ரவுண்டானா, அணுகு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றதால் லால்குடியில் இருந்து நன்னிமங்கலம் வழியாக ஆனந்திமேடு வரை சென்று வந்த அரசு பேருந்து மணக்கால், கொப்பாவளி வழியாக ஆனந்திமேட்டிற்கு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேம்பாலம் பணி முடிந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் நன்னிமங்கலம், மும்முடிசோழமங்கலம், சாத்தமங்கலம், சென்னிவாய்க்கால் பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், மீண்டும் பஸ் இயக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

அதிகாரிகள் நன்னிமங்கலம் முதல் சாத்தமங்கலம் வரை உள்ள சாலை மிகவும் குறுகியதாக காணப்படுவதால் சாலையை சீரமைக்கப்படும் வரை பஸ் இயக்க முடியாது என கூறிவிட்டனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க பரி்சீலனை செய்யப்படும் என தெரிவித்தனர். ஆனால் பல மாதங்கள் ஆன நிலையில் சாலையை பார்வையிட அதிகாரிகள் முன்வரவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம், மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவியரின் நலன் கருதியும் உடனடியாக லால்குடி-ஆனந்திமேடு செல்லும் சாலையை நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் விரிவுபடுத்தி பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தி 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மாட்டுவண்டியில் வந்து லால்குடி தாசில்தார் சத்தியபாலகங்காதரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக இந்த சாலையில்தான் பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது (5 வருடங்களுக்கு பிறகு) பஸ் இந்த வழியில் இயக்க முடியாது என்றால் சாலை குறுகலாக காணப்படுவது எதனால். சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் 5 வருடங்களாகியும் முன் வராதது ஏன் என்று தெரிவித்தனர்

Tags : men ,Dasildar ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்