×

கழிவுகளால் மாசடைந்த கைலாசநாதர் கோயில் குளம்

ஓமலூர், செப்.17: தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான 2 குளங்கள் மாசடைந்து, பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாரமங்கலத்தில் சிற்பகலைக்கு வரலாற்று புகழ்பெற்ற கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்டின் இருபுறமும் 2 தெப்பக்குளங்கள் உள்ளன. இந்த குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி மிதக்கிறது. மேலும், தண்ணீர் பாசி படிந்து பச்சை நிறத்தில் காணப்படுகிறது.  பெரிய குளத்தில் ஆண்டுதோறும் தை பூசத்தில் கைலாசநாதர் சிவகாம சுந்தரி தெப்ப உற்சவம் நடைபெறும். அன்று மட்டும் தான் தெப்பக்குளம் பராமரிக்கப்படுகிறது. அதன் பிறகு தெப்பக்குளத்தை யாரும் கண்டுகொள்வது இல்லை.

தாரமங்கலம் பேருந்து நிலையத்திலேயே 2 தெப்பக்குளங்களும் இருப்பதால், அங்குள்ள கடைகாரர்கள் மற்றும் பலரும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் போன்ற பல்வேறு குப்பைகளை தெப்பக்குளத்திற்குள் வீசி எறிகின்றனர். கழிவுகளை மூட்டை கட்டியும் வீசியுள்ளனர். மேலும், இரவில் குளக்கரையில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை வீசி செல்கின்றனர். எனவே, கோயில் தெப்பக்குளத்தின் புனிதம் மாறாமல் இருக்க பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pond ,Kailasanathar Temple ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...