×

கட்டி முடித்து 3 ஆண்டாகியும் திறக்கப்படாத ரயில் நிலைய கட்டிடம்

ஓமலூர், செப்.17: ஓமலூர் ரயில்நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், அடிப்படை வசதியின்றி பயணிகள் தவித்து வருகின்றனர். ஓமலூரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் வழியாக சேலம், பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் சென்று வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சேலம், ஈரோடு, மேட்டூர், பெங்களூர், மும்பை, ஜோலார்பேட்டை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயிலில் சென்று வருகின்றனர். மேலும் 6 பயணிகள் ரயில் 12 முறை நின்று செல்கிறது. ஆனால், பயணிகளுக்கு அடிப்படை வசதியின்றி இருந்தது. இதனையடுத்து, பயணிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ரயில்வே நிலைய கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டது.

ஆனால், கட்டி முடித்து 3 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை. ரயில் நிலைய புதிய கட்டிடம் பழுதடைந்து, மின் இணைப்புகள் சேதமடைந்து விட்டன. பயணிகளுக்கான அமருமிடம், நிழற்கூடம் போன்றவை இதுவரை அமைக்கப்படாமல் பீடத்துடன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள பழைய ரயில் நிலையத்தில், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழற்கூடை இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்ட போது, புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்படும். மீதமுள்ள சிறுசிறு பணிகளும் செய்து கொடுக்கப்படும் என்றனர்.

Tags : Railway ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...