×

இடிந்து விழும் ஆபத்தில் அங்கன்வாடி மையம்: குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம்

ஊத்துக்கோட்டை, செப்.17:  பெரியபாளையம் அருகே சந்திராபுரம் கிராமத்தில் செடி, கொடிகள் படர்ந்து பழுதடைந்து காணப்படும்  அங்கன்வாடி மையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் அடுத்த சந்திராபுரம்  கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த அங்கன்வாடி மையம் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்து செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. கட்டிடமும் விரிசல் அடைந்துள்ளது.
மேலும்  மாணவ - மாணவிகள்  அச்சத்துடன் படித்து வருகின்றனர். இதனால் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் படிப்பதற்கு  அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்குகின்றனர்.  அங்கன்வாடி மையம் பழுது குறித்து  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் அங்கன்வாடி அருகில் உள்ள கை பம்பும், குடிநீர் தொட்டியும் பயன்பாடில்லாமல் உள்ளது. தற்காலிகமாக சிறிய அளவு சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. அதிலிருக்கும் தண்ணீரை மாணவர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள். எனவே, சம்மந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் சந்திராபுரம் அங்கன்வாடி மையத்தை சீரமைத்தோ அல்லது புதிதாகவோ கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது  :
சந்திராபுரம்  கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாகும்.  அது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில்  உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் மேல் தளம் சிதிலமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைபெய்தால் மழை நீர் வகுப்பறைக்குள் வருகிறது. எனவே புதிய மையம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Anganwadi Center ,Parents ,
× RELATED குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை...