×

அம்பத்தூர் - திருமுல்லைவாயல் வெங்கடாச்சலம் நகருக்கு மினிபஸ் மீண்டும் இயக்க மக்கள் வலியுறுத்தல்

ஆவடி, செப்.17:  அம்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து திருமுல்லைவாயல், வெங்கடாச்சலம் நகருக்கு  மினி பஸ் (தடம் எண்: எஸ் -46) இயக்கப்பட்டது. இந்த மினி பஸ் கிருஷ்ணாபுரம், சோழபுரம், கணபதி நகர், தாமரை நகர், ஸ்ரீசக்தி நகர், செந்தில் நகர், சோழம்பேடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, குளக்கரை தெரு, மாட வீதிகள், எட்டியம்மமன் நகர், மூர்த்தி நகர், திருமுல்லைவாயல் காலனி, வெங்கடாச்சலம் நகர் ஆகிய வழித்தடத்தில் வந்ததால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
 இந்த பேருந்தை பயன்படுத்தி பகுதி மக்கள் தங்களது பல்வேறு பணி நிமித்தமாக சென்றுவந்தனர். மேலும், குறைவான கட்டணத்துடன் செயல்பட்டு வந்த  மினி பேருந்து ஏழை, எளிய மக்களுக்கு வரபிரசாதமாக இருந்தது.
   இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் அத்திவரதர் நிகழ்ச்சிக்காக செல்ல மினி பேருந்து மேற்கண்ட வழித்தடத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, நிகழ்ச்சி முடிந்தும், மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் மினி பேருந்து இயக்கவில்லை. இதனால், அம்பத்தூர், திருமுல்லைவாயல் உட்புறங்களில் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
 இவர்கள், வீட்டில் இருந்து  முக்கிய சாலை சந்திப்புகளுக்கு ஆட்டோவில் செல்ல வேண்டுமானால் ரூ.80 வரை செலவழித்து தான்  வர வேண்டியுள்ளது. மேலும், இரவு நேரங்களில் ஆட்டோ ஆட்டோவில் வருவதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.  ஆவடி போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் நேரில் சென்று புகார் அளித்தும் நிறுத்தப்பட்ட மினி பஸ்சை மீண்டும் இயக்க  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர்.
 எனவே, சம்பந்தப்பட்ட மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தலையிட்டு அம்பத்தூர் முதல் திருமுல்லைவாயல் வெங்கடாச்சலம் நகர்  வரையிலான மினிபேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Ambattur - Thirumullaivayayal Venkatachalam ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...