×

இலவச லேப்டாப் வழங்காமல் புறக்கணிப்பு சப்-கலெக்டர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை

பொள்ளாச்சி, செப். 17: பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, அரசின் இலவச லேப்டாப் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதால், சப்-கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த ஆண்டு  பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் பலரும், சப்-கலெக்டர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு புகார் மனு கொடுத்தனர்.

 அவர்கள் கொடுத்த மனுவில், ‘சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலை பள்ளியில், கடந்த கல்வியாண்டில் 84 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 படித்து வந்தோம். ஆனால் எங்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச லேப்டாப் கிடைக்க பெறவில்லை. ஆனால், எங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில்(2019-20) படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மாதம் 24ம் தேதியன்று, தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. எங்களில் பலர், பொறியியல் கல்லூரி, விவசாய கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகளில் படித்து வருவதால், எங்களின் மேற்படிப்பிற்கு லேப்டாப் தேவைப்படுகிறது. இந்நேரத்தில் லேப்டாப் வழங்கப்பட்டால் பெரும் உதவியாக இருக்கும். எனவே, சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த ஆண்டில் படித்த மாணவர்கள் அனைவருக்கும், தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Tags : office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்