×

காரிமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்

காரிமங்கலம்,செப்.  17: காரிமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை  இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என குழந்தைகளின்  பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் -பாலக்கோடு ரோட்டில்  அரசு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சிக்கு சொந்தமான இந்த  கட்டிடம், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிகிறது. இங்கு  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து  வருகின்றனர். இந்த அங்கன்வாடி கட்டடத்தின் உட்புற சுவர்களில் ஆங்காங்கு  விரிசல் விட்டுள்ளது. மேலும், உள்ளே இருக்கும் சமையலறை பயன்படுத்த  முடியாத மோசமான நிலையில் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் அங்கன்வாடி  மையத்தை சுற்றிலும் பார்த்தீனியம் விஷச்செடிகள் செழித்து வளர்ந்துள்ளது.  அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், மையத்தின் சுற்றுவட்டாரத்தை திறந்த  வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் பன்றிகள் கூட்டம் கூட்டமாக  திரிகின்றன. பாம்பு, தேல் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அங்கன்வாடி  மையத்திற்குள் அவ்வபோது நுழைந்து விடுகிறது.

மேலும், மழைக்காலங்களில்  அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையில் உள்ள விரிசல் வழியாக மழைநீர் உள்ளே  விழுகிறது. மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் எப்போது வேண்டுமானாலும்  இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற  நிலை ஏற்பட்டுள்ளது. அங்கவாடி மையத்தை இடமாற்றி, பழைய கட்டிடத்தை இடித்து  அகற்றி, புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என பலமுறை மாவட்ட  நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை  எடுக்கவில்லை. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன்பு அங்கன்வாடி மையத்தை  இடமாற்றம் செய்ய வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anganwadi Center ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில்...