×

ஊதிய உயர்வு கேட்டு வடமாநில தொழிலாளர்கள் போர்க்கொடி

திருப்பூர், செப்.17:பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்க்கும்  வடமாநில தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை அனுப்பும் புரோக்கர்கள்  ஊதிய உயர்வு கேட்டு பின்னலாடை நிறுவனங்களுக்கு நெருக்குதல் கொடுப்பதோடு அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த மாநிலங்களுக்கு செல்வதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடைகளுக்கு உலக நாடுகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் புதிய ஆர்டர்கள் அதிகளவு வரத்துவங்கியுள்ளது. திருப்பூருக்கு பணியாற்ற தென் மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் வருகை குறைந்து வருவதால், வடமாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்தனர். தற்போது  3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வடமாநில தொழிலாளர்களை அனுப்பும்  புரோக்கர்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகம் வழங்க வேண்டுமென தொழில் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்க துவங்கியுள்ளனர். கட்டுமானப்பணிகளில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.250 முதல் ரூ.600 வரை கூலி கொடுத்து வந்தனர். தற்போது ரூ.500 முதல் ரூ.900 வரை கூலி வழங்க வேண்டுமென கான்ராக்டர்களை வற்புறுத்துகின்றனர். இதனால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கிராமங்களில் உள்ள விவசாய கூலித்தொழிலாளர்கள், மற்றும் பெண்களுக்கு பின்னலாடை உற்பத்தி குறித்து பயிற்சி அளித்து அவர்களுடைய கிராமங்களிலேயே பவர்-டேபிள் யூனிட்டுகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.  இதனால், கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

தற்போது பின்னலாடை உற்பத்தி செய்ய நவீன இயந்திரங்கள் வந்துள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை பளு குறைந்துள்ளது. புதிதாக வேலைக்கு சேரும் தொழிலாளர்களை நேரடியாக பணியில் ஈடுபடுத்தாமல், பயிற்சி நிறுவனங்களில் சில மாதங்கள் பயிற்சி முடித்த பின், பணியில் ஈடுபடுத்த பின்னலாடை உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ‘‘முன்னர் இருந்த வடமாநில தொழிலாளர்கள் போன்று தற்போதுள்ள தொழிலாளர்கள் இல்லை. இதனால், கிராம புற பெண்களுக்கு குடும்ப சூழல் பாதிக்காதவாறு வேலை நேரத்தை மாற்றி வேலை வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம். தமிழக தொழிலாளர்களாக இருந்தால் ஆடை தயாரிப்பு குறித்து ஒரு முறை கற்றுக்கொடுத்தால் போதுமானதாக உள்ளது.  தரமான ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர். இதனால், கிராமப்புறங்களில் திறமையான மேற்பார்வையாளர்களை கொண்டு பவர் டேபிள் யூனிட்டுகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதனால், பின்னலாடை உற்பத்திக்கு தேவையான தொழிலாளர்கள் தட்டுப்பாடுகள் இன்றி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது,’’ என்றனர்.


Tags : Northland ,wage hike ,
× RELATED போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை