×

சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர்,செப்.17: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.குடிமங்கலம் ஒன்றியம் ஆமந்தகடவு பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  எங்கள் பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று சோலார் பேனல் அமைப்பதாக சுமார் 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அதனை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எங்கள் பகுதிக்கு வரும் பி.ஏ.பி வாய்காலின் ஒரு கரையையும் உடைத்துள்ளனர். இந்த சோலார் பேனல் அமைக்க இடத்தை சுத்தம் செய்வதால் மழை நீர்கள் அனைத்தும் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் சோலார் பேனல் அமைப்பதால் விலை நிலங்கள் பாதிக்கும் அபாயமும் ஏற்படுகின்றது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 3 முறை மாவட்ட கலெக்டரிடம் நேரில் மனு கொடுத்துள்ளோம். மனுவின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என கோரி அப்பகுதி பொதுமக்கள் சுமார் 200 பேர் தங்களது ஆதார் கார்டு, ரேசன் கார்டு ஆகியவற்றை ஒப்படைப்பதாக கூறிவந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டரிடம் மேற்கண்ட கோரிக்கைகளை வைத்து மனு அளித்தனர்.

வாவிபாளையம் பொதுமக்கள் அளித்த மனு:  திருப்பூர் மாநகரம், பெருப்பெரிச்சல் கிராமம் 18 வது வார்டு வாவிபாளையம் அருகில் 500 மீட்டர் தொலைவில் வேலாங்காடு, சக்கரைகாடு பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை அமைய ஏற்பாடுகள் நடந்து வருவதாக அறிந்தோம். சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கும் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் இப்பகுதியில் சமூக அமைதி கேள்விக்குறியாகும். மேலும் சுற்றிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் இளைஞர்கள், மாணவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும், எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர்.  சித்தம்பலம் பொதுமக்கள் அளித்த மனு: பல்லடம், சித்தம்பலம் பகுதியில் சுமார் 1000 குடியிருப்புகள் இருந்து வருகிறது. இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து காணப்படுகிறது. இன்றுடன் எங்கள் பகுதிக்கு குடிநீர் வந்து 17 நாட்கள் ஆகின்றது. இதனால் மாவட்ட நிர்வாகம் தலையீடு செய்து குடிநீர் விநியோகத்தை முறைபடுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

 இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அளித்த மனு : திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை பின்புறமுள்ள தந்தை பெரியார் நகர் பகுதியில் சட்டவிரோதமான கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் அப்பகுதியில் போதை பொருட்களை உபயோகித்து வருபவர்களால் அதிகப்படியான விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே மேற்படி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் அளித்த மனு: சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனிநலவாரியம் அமைக்க வேண்டும். இந்த வாரியத்தில் அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர்களையும் உறுப்பினர்களாக்கி சமூக பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். பணியிடத்தில் நிகழும் விபத்துகளில் உயிரிழக்கும் சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளர் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் வாரியம் மூலம் வழங்குவதோடு திருமண  உதவித்தொகையை ரூ. 1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் அளித்த மனு: விசைத்தறி உரிமையாளர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தற்போது பெற்று வரும் சம்பளத்துடன் 100 சதவிதம் அதிகமாக வழங்க வேண்டும். அனைவருக்கும் பண்டிகை விடுமுறை, தேசிய விடுமுறைகளுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்கிட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலை, குறைந்தபட்ச ஊதியம் தினசரி ரூ.750 வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags : Anti-Collector's Office Siege to Set Solar Panel ,
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...