×

பயணிகள் வலியுறுத்தல் அப்புறப்படுத்த கோரிக்கை திருமயம், அரிமளம் பகுதியில்

திருமயம்,செப்.17: அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள நீர் நிலைகள், வரத்து வாரிகளை மையமாக கொண்டு செயல்படும் ஹோட்டல், இறைச்சி கடைகள் வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம், சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட சிற்றுண்டிகள், ஓட்டல்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவருந்த வந்து செல்கின்றனர். இவற்றில் பெரும்பாலான ஓட்டல்கள் நீர் நிலைகள், வரத்துவாரிகளை ஓட்டியே காணப்படுகிறது. இந்நிலையில் ஹோட்டல்களில் வீணாகும் கழிவு பொருட்கள், காய்கறிகள், கெட்டுப்போன உணவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த நீர் நிலைகள், வரத்துவாரிகளை குப்பை தொட்டிபோல் ஹோட்டல் உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உதாரணத்திற்கு ஓட்டல் சமையல் அறையில் வீணாகும் நீர் நேரடியாக நீர் நிலையில் கலக்குகிறது. அதேபோல் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டு கை கழுவும் நீரும் நீர்நிலை, வரத்து வாரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் நீர் நிலைகள், வரத்து வாரிகள் மாசடைந்து வருவதோடு துர்நாற்றம் வீச தொடங்குகிறது. இதனால் நீர் நிலையில் உள்ள நீர்களில் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புள்ளதோடு நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளும் நீர் நிலைகள், வரத்து வாரிகள் ஒட்டியே செயல்படுகிறது. இதனால் இறைச்சி கழிவுகளை கடை உரிமையாளர்கள் நீர் நிலைகளில் கலந்து விடுகின்றனர். இந்நிலையில் இதுபற்றி எதுவுமே தெரியாததுபோல் மாவட்ட நிர்வாகமும், வட்டார சுகாதார துறை அதிகாரிகளும் இருந்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள ஓட்டல், சிற்றுண்டிகள், இறைச்சி கடைகளை ஆய்வு செய்து முறையாக கழிவு மேளாண்மை நடைபெறுதை உறுதி செய்ய வேண்டும். இல்லாத கடைகளுக்கு கால அவகாசம் வழங்கி கழிவு மேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

உணவு தரம் மோசம்: அரிமளம், திருமயம் பகுதியில் பைசா மதிப்பில் விற்பனையான இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகள் தற்போது ரூபாய் மதிப்பில் விற்கப்படுகிறது. பைசா கொடுத்து சாப்பிட்ட சுவை ரூபாய் செலவு செய்தும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு காரணம் உணவு வியாபாரிகள் பணத்தை சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உணவு சுவைக்காக பல்வேறு வகையான வேதிப்பொருட்கள் உணவில் கலப்பதால் வயிறு உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சுகாதாரமற்ற முறையில் சமையலறைகள், குடிநீர் உள்ளதால் அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு ஏற்றதில்லை என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் முதல் நாள் மீதமுள்ள உணவுகளை பல நாட்கள் முறையற்ற முறையில் பதப்படுத்தி விற்பனை செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Travelers ,Thirumayam ,Arimalam ,
× RELATED புதுக்கோட்டையில் மழை காரணமாக ஒன்றிய...