×

அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு

புதுக்கோட்டை,செப்.17: அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வரும் ராஜசேகரன் என்பவர் கொடுத்த மனுவில், எனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்.

இது குறித்து நான் புகார் கொடுத்ததை தொடர்ந்து புதுக்கோட்டை தாசில்தார் சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றும்படி நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு உள்ளார். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட வேண்டும் எனக்கூறியிருந்தார்.கறம்பக்குடி தாலுகா முன்னங்குறிச்சி தெற்கு கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் ராஜ்குமார் என்பவர் கொடுத்த மனுவில், கோட்டைக்காடு ஆதிதிராவிடர் தெருவில் உள்ள சுமார் 50 சென்ட் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, வேலிகள் கூரை கொட்டகைகள் போட்டு உள்ளனர். மேலும் அவர்கள் அரசு நிலத்தில் உள்ள மரங்களை வெட்டி உள்ளனர். இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்பு செய்து உள்ள தனிநபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

Tags : land ,
× RELATED பயிரை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள்...