×

திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால், செப்.17: காரைக்கால் திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயிலில் கடந்த 1991ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 28 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, கோயில் நிர்வாகம் முடிவு செய்து திருப்பணிகளை தொடங்கியது. சுமார் ரூ.40 லட்சம் செலவில் நடைபெற்று வந்த இப்பணிகள் நிறைவு பெற்றநிலையில் நேற்று மகா குபாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் சன்னதியில் புதிதாக பெருமாள் சயன கோலம், நின்ற கோலம், அமர்ந்த கோலத்தில் சுவரில் சுதை வேலைப்பாடுகளுடன் சிலையாக செய்து வைக்கப்பட்டுள்ளது. தாயார் சன்னதி பிராகார பக்க சுவரில் அஷ்ட லட்சுமிகள் சிலைகள் தயார் செய்து வைக்கப்பட்டு உள்ளது. ஆஞ்சநேயர் சன்னதி வெளிப்புற சுவரில், அவரது பல்வேறு கோலங்கள் சுதை வடிவில் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 4 கால யாகசாலை பூஜைகள் கடந்த 14ம் தேதி தொடங்கியது. 15ம் தேதி 2 மற்றும் 3ம் கால பூஜையும், நேற்று காலை 4ம் கால யாகச்சாலை பூஜை நிறைவும், 8 மணிக்கு மகா பூர்ணாஹுதி செய்யப்பட்டு 9 மணிக்கு புனிதநீர் கடம் புறப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் விக்ராந்த்ராஜா, முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்குமார் பன்வால், எஸ்.பிகள் மாரிமுத்து, வீரவல்லபன் மற்றும் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான விழா ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி ரேவதி மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Thirumalairayanapattinam ,Prasanna Venkatesa Perumal Temple Kumbabhishekam ,
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு