×

நோய் பரவும் அபாயம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வாலிபர்கள்

கும்பகோணம், செப். 17: தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு சில வாலிபர்கள் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். கோயில் வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் பக்தர்கள் அச்சத்துடன் உள்ளனர். கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டுள்ள ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது. இது யுனஸ்கோவால் அங்கீகரி–்க்கப்பட்டதாகும். இந்த கோயிலில் அரியவகை சிற்பங்களும் உள்ளன. அதனால் இந்த கோயிலுக்கு தினம்தோறும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்ட, உள்ளூர் மக்கள் ஏராளமானோர் வந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டு பிரகாரத்தில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டு செல்வர். இந்த கோயில் தற்போது தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின்கீழும், இந்திய தொல்பொருள் துறையின் பராமரிப்பிலும் இருந்து வருகிறது. வெளிநாடு மற்றும் உள்ளூர் கல்லூரி மாணவர்கள், தொல்பொருள் துறைக்கு படிப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து அரியவகை சிற்பங்களை வரைந்தோ அல்லது புகைப்படங்களாகவோ குறிப்பெடுத்து கொண்டு செல்வர். கும்பகோணம் பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்பவர்கள் தாராசுரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டும், பிறகு கோயில் வளாகத்தில் உள்ள புல்தரைகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு இளைப்பாறி செல்வர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயில் வளாகத்தில் தனியாக இருக்கும் காதலர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்திருப்பவர்களிடம் சில வாலிபர்கள் தகாத வார்த்தைகள் பேசி அவர்களிடமிருந்து பணத்தையும்,செல்போனை பறித்து சென்று விடுகின்றனர். மேலும் பல வாலிபர்கள் இரவு நேரங்களில் கஞ்சாவை புகைத்து கொண்டு கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள மொட்டை கோபுரத்தில் அமர்ந்து கொண்டு பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தாராசுரம் கோயிலுக்கு பெரும்பாலான வெளிநாட்டினர், கட்டிட கலைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும், குறிப்பெடுப்பதற்கும் வருவார்கள். அவர்களை சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் ஏதேனும் தொல்லை கொடுத்தால் பெரும் விபரீதம் ஏற்படும். இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள், கஞ்சாவை புகைத்து கொண்டு கோயில் வளாகத்தில் இருந்த பெண்ணை கிண்டல் செய்துள்ளனர். இதை கோயில் பாதுகாவலர் பார்த்து தட்டி கேட்டார்.

அப்போது போதையில் இருந்த சிறுவர்கள், அந்த பாதுகாவலரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து ஓடிவிட்டனர். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : devotees ,temple complex ,Airavadeshwara ,
× RELATED சின்னாளபட்டியில் கேட்வால்வு தொட்டியில் தேங்கும் நீரால் நோய் அபாயம்